முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

லக்னோ, மார்ச் 16 - 19 கேபினட் அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் உட்பட 47 அமைச்சர்களுடன் உத்தரபிரதேச மாநில முதல்வராக முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இம்மாநிலத்தின் இளவயது முதல்வர் என்ற பெருமையை அகிலேஷ் யாதவ் தட்டிச்சென்றுள்ளார். உ.பி., பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது தெரிந்ததே. இந்த தேர்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிஞ்சியது படுதோல்விதான். உத்தரபிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஜனாதிபதி ஆட்சிதான் ஏற்படும். யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது. ஆனால் கருத்துக்கணிப்புகளையெல்லாம் மீறி இம்மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி மகத்தான வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி  224 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற்றது. இதையடுத்து முலாயம்சிங் யாதவ் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அவரது மகன் அகிலேஷ் யாதவ்தான் முதல்வராக வேண்டும் என்று அவரது கட்சியினர் விருப்பம் தெரிவிக்கவே, அதற்கு பச்சைக்கொடி காட்டினார் முலாயம்சிங்யாதவ். 

இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடி அகிலேஷ் யாதவை புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் அகிலேஷுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். பெற்ற தந்தை என்ற முறையில் முலாயம்சிங் யாதவும் மகனை வாழ்த்தினார். பொதுவாழ்வில் நேர்மையோடு இருக்க வேண்டும் என்று மகனுக்கு அறிவுரை கலந்த வாழ்த்து தெரிவித்தார் முலாயம்சிங். 

இதையடுத்து 15 ம் தேதி அகிலேஷ் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவரான அகிலேஷ் யாதவ்,  உ.பி.யின் 33 வது முதல்வராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 47 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் 19 பேர் கேபினட் அமைச்சர்கள். 28 பேர் இணை அமைச்சர்கள். இவர்களுக்கு உ.பி. கவர்னர் பி.எல்.ஜோஷி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். முதல்வராக பதவியேற்றுள்ள அகிலேஷ் யாதவுக்கு தற்போது வயது 38. இளம் வயது முதல்வர் என்ற பெருமையை அகிலேஷ் யாதவ் பெற்றுள்ளார். இந்த பதவியேற்புவிழா லக்னோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லா மார்ட்டினைர் கல்லூர் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அந்த கல்லூரி வளாகமே அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இந்த விழாவில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பிரகாஷ் சிங் பாதல்,  ஜனதாதள்(ஐக்கிய) தலைவர் சரத்யாதவ், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், வ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரின் பிரதிநிதியாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் பிரதிநிதியாக மத்திய இணை அமைச்சர் சுல்தான் அஹமது, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம்பிரகாஷ் செளதாலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் மோதிலால் ஓரா உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு அகிலேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். யோகா குரு பாபா ராம்தேவும் கலந்துகொண்டார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சில தலைவர்களும், உ.பி. காங்கிரஸ் தலைவர் ரீட்டா ஜோஷி பகுகுணா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். குறிப்பாக பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, சகாரா குரூப் சேர்மன் சுப்ரோத்தோ ராய், முன்னாள் எம்.பி. ஜெயாபச்சன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். 

நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் முகமது ஆசம்கான், சிவபால்சிங் யாதவ், அஹமது ஹசன் உள்ளிட்ட 19 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றார்கள். இணை அமைச்சர்களாக மகபூப் அலி, நரேந்திரசிங் யாதவ், ராஜேந்திரசிங் ராணா, சித்தரஞ்சன் ஸ்வரூப், அபிஷேக் மிஸ்ரா உள்ளிட்ட 28 பேர் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்ற அகிலேஷ் யாதவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்