முக்கிய செய்திகள்

தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். சட்டப்படி நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன் என்று படத்தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று நிருபர்களிடம் கூறினார். கடந்த சில மாதங்களாக பட தயாரிப்பாளர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் இடையே ஊதிய பிரச்சனை நடந்து வந்தது. பல தரப்புகளில் பேச்சு வார்த்தை நடத்தியும், இரு அமைப்புகளுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்பட வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர் அமைச்சர் செல்லப்பாண்டியன் இரு அமைப்பு பொறுப்பாளர்களையும் அழைத்து தனித்தனியே பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் விளைவாக பெப்ஸி அமைப்பினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்று எஸ்.ஏ.சந்திரசேகரை தலைவர் பதவியிலிருந்து விலகும்படி தயாரிப்பாள்ர சங்கத்தில் உள்ள பலர் கோரினார்கள். அதோடு அவசர அவசரமாக தயாரிப்பாளர் பொதுக்குழு கூடியது. இதில் 20 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சில பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா செய்ததோடு `அட்டாக்கமிட்டி' என்ற ஒன்றை உருவாக்கி அதில் இப்ராகிம்ராவுத்தரை தலைவராக நியமித்து உள்ளனர். இந்த கமிட்டியின் முன்னிலையில் புதிய தொழிலாளர் அமைப்பு செயல்படும் என்று தயாரிப்பு சங்கக்குழு உறுப்பினர் கே.ராஜன் கூறினார். இதற்கு பதில் தரும் விதமாக சங்க தலைவர் எஸ். ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் சட்டப்படி தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். தமிழக திரைப்படம் நன்மை பெறவும் நல்ல நிலையில் வளர்ச்சி அடையவும் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உழைக்கின்றேன். இதை பொறுத்துக்கொள்ளாத ஏதோ ஒரு சக்தி எதிராக செயல்படுகிறது. தற்போது இரண்டு அமைப்புகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான அரசாங்கம் சார்பில் அமைச்சர் அழைத்தார். நான் மட்டும் செல்லவில்லை என்னோடு 6 பேர் வந்திருந்தார்கள். அங்கே அரசு எடுத்த முடிவுகளுக்கு தான் நாங்கள் கட்டுப்பட்டோம். அரசாங்கம் உதவி இல்லாமல் சினிமா தொழிலை நடத்த முடியாது. அதனால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கியதாக பேட்டி கொடுக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டப்படும் போது தலைவர் அல்லது துணை தலைவர் அவசியம் இருக்கவேண்டும். அப்படியாரும் இல்லாத நிலையில் பொதுக்குழுவை கூட்டியது சட்டப்படி தவறு. அதிலும் என் மீது நடவடிக்கை என்பது மிகவும் தவறானது. நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். என்று சந்திரசேகரன் பேட்டி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: