செக்டேம் அமைக்க தே.மு.தி.க. எம்.எல்.ஏ கோரிக்கை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - விருத்தாசலம் வழியாக ஓடும் ஆறுகளின் நடுவில் பல இடங்களில் செக்டேம் அமைத்து நிலத்தடி நீரை அதிகரித்து விவசாயிகளின் அச்சத்தைபோக்க வேண்டும் என விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. உறுப்பினர் கேட்டுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:- நகரப் பகுதியில் சாலைகள் போடும்போது சாலையை என்ட் டு என்ட் சாலையாக போட்டு ஆக்கிரமிப்பை தடுத்து சாலை விபத்துக்களை தடுத்திட வேண்டும். மேலும் மக்கள் நெருக்கடியான பகுதி மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரப் பகுதியை தவிர மற்ற இடங்களில் இரவு நேரத்தில் சாலை பணியை மேற்கொள்ள கூடாது என்ற அரசு விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும். வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டு இருக்கும் நம் நாட்டில் தேவையான இடங்களில் மேம்பாலமும், சாலைகளும் அமைப்பது அவசியம். ஆனால் இன்னும் தேவைப்படுகின்ற இடங்களில் அவைகள் முழுமையாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக விருத்தாசலம் தொகுதியில் நல்லூர் முதல் இலங்கியனூர் மேம்பாலத்தை கூறலாம். மழைக் காலத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீவுபோல் எந்தவித போக்குவரத்தும் இல்லாமல் தவிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலத்திற்கு 4 கோடிக்கான மதிப்பீட்டில் திட்டம் போடப்பட்டது. ஆண்டுகள் உருண்டோடியதாலும், விலைவாசி உயர்வினாலும் தற்போது அதன் மதிப்பீடு 10 கோடிக்கு உயர்ந்துவிட்டது. ஆனால் இதுவரை நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிதி ஆண்டிலாவது நிதிஒதுக்கி பணி துவங்கிட வேண்டுகிறேன்.

அதேபோல நல்லூர் ஒன்றியத்திலுள்ள குறிச்சி மேம்பாலம், விருத்தாசலம் ஒன்றியத்தில் மாத்தூர் அருகே உள்ள இரண்டு மேம்பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் ஆகும். ஆகவே இப்பணிகளுக்கும் நிதிஒதுக்கி தரவேண்டுகிறேன்.

நிலத்தடி நீரை மாசு இல்லா நீராக மாற்றுவதற்கு இந்த அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டம்போல், ஒரு திட்டத்தை அதிரடியாக உருவாக்க வேண்டும். நிலத்தடிநீரை சேமிக்க விருத்தாசலம் வழியாக ஓடும் ஆறுகளின் நடுவில் பல இடங்களில் செக் டேம் அமைத்து நிலத்தடி நீரை அதிகரித்து விவசாயிகளின் அச்சத்தை போக்குமாறு வேண்டுகிறேன்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: