முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தேர்தலில் கம்யூனிஸ்ட் போட்டியிடாது

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரன் கடந்த 1-​ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு ஜூன் 12-​ல் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படும் முன்னரே இந்தத் தெகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் அவர் தனது பிரச்சாரத்தை துவக்க உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தெண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிற கட்சிகளான தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் இன்னும் வேட்பாளர் பெயரை அறிவிக்காத நிலையில், பா.ம.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் தா.பாண்டியன் தலைமையில் நேற்று சென்னையில் நாயக் பவனில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வி.அழகிரிசாமி தலைமையேற்றார். இதில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணை செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ``இன்றைய அரசியல் சூழ்நிலையில் புதுக்கோட்டை தொகுதிக்காக நடைபெறும் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை நிறுத்த தார்மீக உரிமை பெற்றிருந்தாலும், 2011-ல் அமைந்த கூட்டணிக்கு தலைமேற்ற கட்சியே மாறுபட்ட நிலை எடுத்து அறிவித்திருப்பதாலும், இடைத்தேர்தல் நடைமுறை பலவீனங்களை உணர்ந்திருப்பதாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளது'' என்ற தீர்மானம் நிறைவேறியது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் இதைத் தெரிவித்தார்.

மேலும்அவர் கூறுகையில், புதுக்கோட்டை தொகுதியை தங்களுக்கு விட்டுத் தருமாறு அ.தி.மு.க. தலைமைக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தனது வேட்பாளரை அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. இதனால் நாங்கள் அங்கு போட்டியிடுவது நேர விரயம் என்பதால் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.அங்கு போட்டியிடும் எந்தக் கட்சியாவது ஆதரவு கோரினால் அதைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்