முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் பால் விற்பனையை அதிகரிக்க திட்டம்

வியாழக்கிழமை, 24 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.24 - பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது சம்பந்தமாக மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் அமைச்சர் வி.மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் நேற்று முன்தினம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆவின் நிர்வாக இயக்குனர் மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், பால்நுகர்வோர் கூட்டுறவுச்சங்க செயலாளர்கள் மற்றும் மொத்த விற்பனை முகவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் இரண்டாவது வெண்மை புரட்சியை ஏற்படுத்திட பல்வேறு பால்வளத் திட்டங்களை செயலாக்க வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக பால் கொள்முதல் கடந்த ஆண்டைவிட சுமார் 3 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

மேலும் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர்களுக்கு தேவையான அளவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரில் ஆவின் பாலகங்கள், ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள இதர சில்லறை விற்பனையாளர்களிடமும் ஆவின் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.

ஆவின் விற்பனையாளர்கள் அனைவரும் லாப நோக்கம் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். நுகர்வோர்களுக்கு சரியான விலையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

நுகர்வோர் தங்களது ஆலோசனை மற்றும் புகார்களை ஆவின் 24 மணிநேர நுகர்வோர் நலம் மற்றும் சேவை பிரிவு 1800 425 33 00 (இலவச சேவை) என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!