முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரச்சாரம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - புதுக்கோட்டை தொகுதியில்  அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா   இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.முதலமைச்சரை வரவேற்க அமைச்சர்கள்,  நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். புதுக்கோட்டைத் தொகுதியில் இந்திய கம்யூ. கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.   அத்தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.    அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என 20 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. அதிமுக, தேமுதிக இடையே இங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை  மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.  அதிமுக வேட்பாளர்  கார்த்திக் தொண்டைமான் வெற்றிக்காக அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நியமித்த தேர்தல் பொறுப்பாளர்களான, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை  ஆதரித்து நடிகர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். நடிகர்கள் ராமராஜன், செந்தில், தியாகு, குண்டு கல்யாணம், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் பொறுப்பாளர்கள்,அமைச்சர்கள், தொகுதியில் முகாமிட்டு பம்பரம் என செயல்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீடு வீடாகச் சென்று அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று   புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதை யடுத்து தேர்தல் ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செந்தில் பாலாஜி, மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜய் பாஸ்கர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி, ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் (பொதுப் பணித்துறை) சத்தியேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் இடங்களில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை தொகுதியில் உள்ள கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அவர் அங்கு 9 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி முதலில் புதுப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் துவக்குகிறார். அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக நிர்வாகிகள் பொள்ளாச்சி ஜெயராமன், கே.கே.கலைமணி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.முருகானந்தம் ஆகியோர் ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்கள்.  அடுத்ததாக மாத்தூர் என்ற இடத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். அங்கு அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இச்சடி என்ற இடத்தில் முதலமைச் சர் பேசுகிறார்.  அமைச்சர்கள் செ.தாமோதரன், தங்கமணி, செந்தூர் பாண்டியன், எம்.எஸ்.எம். ஆனந்தன், தொழிற்சங்க  செயலாளர் சின்னச் சாமி எம்எல்ஏ, வேணுகோபால் எம்பி, அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். பின்னர் அண்டகுளம் விளக்கு, ஜீவா நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை அடுத்து பிருந்தாவனம் என்ற இடத்தில் முதலமைச்சர் பேச இருக்கிறார்.  அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மூர்த்தி, கே.டி.பச்சமால், மாணவர் அணிசெயலாளர் சரவணபெருமாள், சிறுபான்மை பிரிவு  செயலாளர் அன்வர்ராஜா ஆகியோர் முதலமைச்சரை வரவேற்க ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். அடுத்ததாக மியூசியம் கார்னர் என்ற இடத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஓட்டு வேட்டையாடுகிறார். இங்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செல்லப் பாண்டியன், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், மு.தம்பிதுரை, ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ, வைகை செல்வம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அண்ணாசிலை அருகே நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்கிறார். அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் ராஜ், எம்.சி.சம்பத், டி.கே.எம்.சின் னையா, டாக்டர் சுந்தர்ராஜன், பி.வி. ரமணா, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.  இறுதியாக டிவிஎஸ் கார்னர் என்ற இடத்தில் முதலமைச்சர் பேசுகிறார்.  அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், கோகுல இந்திரா, கே.ஏ.ஜெயபால், டாக்டர் வி.எஸ்.விஜய், முகமது ஜான், என்.சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பிரசாரத்தை முடித்துக் கொண்டு இன்று மாலையே சென்னை திரும்புகிறார். டிவிஎஸ் கார்னரில்  உரையாற்றிய பிறகு அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து   முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டு திருச்சி செல்கிறார்.அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரசாரம் நாளை (10​ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.  12​ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்