முக்கிய செய்திகள்

உதயசூரியன் சின்னம் அச்சிடப்பட்ட டி.ஷர்ட்டுகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
dmk-logo

 

திருப்பூர்,ஏப்.1 - தி.மு.க. தலைவர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்துடன் அச்சிடப்பட்டிருந்த 30 ஆயிரம் டிஷர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ 30 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தொகுதிகள் தோறும் துணை வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லடம் தொகுதிக்கு துணை வட்டாட்சியர் இந்திராணி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ராமமூர்த்தி மற்றும் 5 காவலர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதயசூரியன் சின்னத்துடன் கூடிய டி.ஷர்ட்டுகள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்படுவதாக பறக்கும் படை அலுவலர்களுக்கு வந்த தகவலின் பேரில் பெருமாநல்லூர் சாலை ஸ்ரீநகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் டி.ஷர்டுகளை கண்டறிந்தனர். ஆண்டிபாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த 30 ஆயிரம் டிஷர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து பறக்கும் படை அலுவலர் கூறுகையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: