முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமிற்கு ரூ.500 கோடி நிவாரண நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கெளகாத்தி, ஜுலை - 3 - அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த பிறகு அம்மாநிலத்திற்கு ரூ. 500 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கடுமையான மழையால் அம்மாநிலத்தின் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு மொத்தம் 77 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டனர். அதன்பிறகு கெளகாத்தி வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் தருண் கோகோய் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வெள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.  அசாமில் வெள்ளதால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்திற்கே கொண்டுவந்து குடியமர்த்தி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதே இப்போதைய பிரதான நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார். அசாமில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 640 வீரர்களைக் கொண்ட 16 தேசிய பேரிடர் நிவாரணப் படையை சேர்ந்த குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக 71 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் 752 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 4 ஆயிரம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 20 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.  மொத்தம் 768 நிவாரண முகாம்களில் 4.84 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மன்மோகன்சிங் கூறினார். போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவை வெள்ள நிவாரண உதவிகளுக்காக விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

அசாம் மாநிலத்தில் இருந்துதான் பிரதமர் மன்மோகன்சிங் ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்