முக்கிய செய்திகள்

ஊழல் அதிகாரிகள் பட்டியல் - புலனாய்வு துறைக்கு உத்தரவு

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      இந்தியா
CWG

 

புதுடெல்லி, ஏப்.13 - டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதில் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரிகள் பட்டியலை தயார் செய்யும்படி புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக விளையாட்டு போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி மற்றும் பல உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் அதிகாரிகள் பட்டியலை தயாரிக்கும்படி அரசு புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய காண்ட்ராக்ட் எடுத்த சிவில் மற்றும் கட்டுமான கம்பெனிகள் அதற்கான தஸ்தாவேஜூகளை இணையதளத்தில் வெளியிடும்படியும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடுதல் தொகைக்கு காண்ட்ராக்ட் விடுத்து கமிஷன் பெற்றது, லண்டனில் இருந்து ஜோதியை கொண்டு வருவதில் கூடுதல் செலவு, டெல்லி நகரை அழகுபடுத்துவது மற்றும் விளையாட்டு கிராமம் கட்டுவதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: