முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் திரைப்படம் டி.டி.எச். மூலம் வெளியிடப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.30 - விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் என்றும், டி.டி.எச். ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்திருக்கும் புதிய படம், விஸ்வரூபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக ஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ரூ.95 கோடி செலவில், மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தை டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப கமல்ஹாசன் ஏற்பாடு செய்து இருக்கிறார். இதற்கு சில தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால், கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.டி.எச். மூலம் படத்தை திரையிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறுகிறார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். உலகிலேயே இதுதான் முதல் முறை. உலகமே நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.சேட்லைட் தொலைக்காட்சி வந்தது போல், வேறு ஒரு பரிணாம வளர்ச்சி இது. டி.வி.யில் இலவசமாக படம் காட்டப்பட்டது. டி.டி.எச். மூலம் வருமானம் வருகிறது.

இதன் மூலம் கள்ள வீடியோ தொழில் சிதைக்கப்பட்டு, வருமானம் எங்களுக்கு வந்து சேரும். ஆனால் சிலர், திருடன் கொண்டு போனாலும் பரவாயில்லை. உடையவனுக்கு லாபம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். டி.டி.எச். தொழில்நுட்பம், ஒரு கூட்டு முயற்சி வியாபாரம். இதில், யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. 6 மாதங்களாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு இது.

தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் படத்தை திரையிட, இதுவரை 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படத்தை திரையிட மாட்டோம் என்று சொல்பவர்களிடம், திரையிட சொல்லவில்லை.

படம், குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும். ஏர்டெல், சன், டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 5 டி.டி.எச். நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன. பொது இடத்தில் யாராவது படத்தை திரையிட்டால், அது ட்டியிருக்கும் கடையை கன்னக்கோல் மூலம் திருடுவது போல் ஆகும். அப்படி திருடினால், போலீஸ் பார்த்துக் கொள்வார்கள். 

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அவரிடம், நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். என்றாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை. எனக்கு எந்த குறையும் இல்லை. நெருக்கடி, எல்லோருக்கும் வரும். டாட்டா, பிர்லாவுக்கும் வந்திருக்கிறது. பஸ்சில் போய்க்கொண்டிருந்த என்னை, ஆடி காரில் போக வைத்து இருக்கிறீர்கள். ரசிகர்கள், என்னை வசதியாகத்தான் வைத்து இருக்கிறார்கள். மேற்கண்டவாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!