முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மென்திறன் பயிற்சி மையங்களுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.20 - 5 பல்கலைகளில் 30 கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி மையங்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும். அறிவிற் சிறந்த, திறன் மிக்க சமுதாயத்தை  உருவாக்க  தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்றைய உலகம் கணினி உலகம் என்றே சொல்லலாம்.  தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர்களின் திறன் உயர்த்தப்பட வேண்டும்.  உலகப் பணித்திறன் தொகுப்பு அடையாளப்படுத்தியுள்ள 60 விதமான அடிப்படை மென்திறன்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, அதில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்காக முதற்கட்டமாக 5 பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள 30 கல்லூரிகளில்  மென்திறன் மையங்களை, 1 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலக் கல்லூரி, சென்னை, ஸ்ரீ சுப்ரமணியசாமி அரசு கலை கல்லூரி, திருத்தணி, ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு, ஆகிய 3 கல்லூரிகளிலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யார், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர், அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி, குடியாத்தம், ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம், கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம், அரசுக் கலைக் கல்லூரி, தர்மபுரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூர் ஆகிய 7 கல்லூரிகளிலும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரி மேலூர், அரசு மகளிர் கலைக் கல்லூரி,  நிலக்கோட்டை,  ராமநாதபுரம், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி, வி.எஸ்.சிவலிங்கம் அரசு கலைக் கல்லூரி, லாங்குறிச்சி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை ஆகிய 6 கல்லூரிகளிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரி, (தன்னாட்சி), கும்பகோணம், குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக் கல்லூரி, தஞ்சாவூர், தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் அரசுக் கல்லூரி, மயிலாடுதுறை, மன்னை ராஜகோபால சுவாமி, அரசு கலைக் கல்லூரி, மன்னார்குடி, அரசு  கலைக் கல்லூரி, திருவெறும்ர், திருச்சிராப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி, அரியலூர், அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை, கரூர், அரசு மகளிர்  கலைக்கல்லூரி, புதுக்கோட்டை  ஆகிய 8 கல்லூரிகளிலும்,  பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ், மகளிர் அரசு கலைக் கல்லூரி, சேலம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, ராசிபுரம், அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருப்ர், அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம்,  ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய 6 கல்லூரிகள் என 5 பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், பல்கலைக்கழகங்களுக்கும், சமூகத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில் நுட்பம் அடைகாப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் மையங்களை,  உயர்கல்வித்துறையின் கீழ் 9 பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மையமும் 29.88 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

இந்த மையங்கள், சென்னை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம்,  திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய 9 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும்.

இந்த மையங்கள்,   மாணவர்களிடையே தொழில் முனையும் திறனையும், தொழில் நுட்ப அறிவு, குறிப்பாக தகவல் தொழில் நுட்ப அறிவினை மேம்படுத்துதல்,  மாணவர்களிடையே எழும் புதுவிதமான யுக்திகளைக் கொண்டு வணிகரீதியான பொருட்களை உற்பத்தி செய்ய  மாணவர்களை ஊக்குவித்தல்,  வருங்காலத்தில் மாணவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மாணவர்களிடையே, வருங்கால  தொழில் முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்யும்.

மேலும், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகம் பயன் பெறும் வகையில், இம் மையங்களில் ஆராய்ச்சி வழிமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பேணி காக்கப்படும். இம் மையங்கள் மூலம் கல்லூரி​கிராம தொழில் நுட்ப  சங்கங்கள் அமைக்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் அறிவுத் திறன் கண்டறியப்பட்டு, அவைகள் ஊக்குவிப்பத்துடன், மாணவர்களிடையே சமுதாய அர்ப்பணிப்பு உணர்வு ஏற்படுவதற்கு வழிவகை ஏற்படும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony