முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாராலும் அ.தி.மு.க.வை வெல்லமுடியாது: அமைச்சர்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,ஜன.20 - பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.வை வெல்ல முடியாது என்று ராமநாதபரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். 

ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நகர் கழக செயலாளர் அங்குச்சாமி தலைமையில் நடைபெற்றது. நியமனக்குழுதலைவர் ராஜாஉசேன், வீரபாண்டியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாவட்;ட செயலாளர் ஆணிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, தொகுதி செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசியதாவது:- தமிழக மக்களுக்கு உதவுவதற்காகவும், தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் உதயமானதுதான் அ.தி.மு.க.  ஆரம்பத்தில் சுயேட்சை சின்னமாக உருவான இரட்டை இலை சின்னம் இன்று ஆட்சி அதிகாரம் பெற்று மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்.காலத்தில் 17லட்சம் தொண்டர்கள் இருந்த இந்த கட்சியில் இன்று முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் நல்வழியில் ஒருகோடியே 50லட்சம் தொண்டர்களுடன் யாராலும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தமிழக மக்களுக்காக அண்ணா தொடங்கிய கட்சியை இன்று கருணாநிதி தனது குடும்பத்திற்கான கட்சியாக மாற்றி விட்டார். 5முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தவில்லை. 2ஜி ஊழல் காரணமாக செல்வாக்கு இழந்து தேர்தலில் தோற்றுவிட்டதால் அந்த சூழலை மாற்ற மாநாடு நடத்தினார். தமிழை வளர்க்க எதுவும் செய்யாத அவர் தமிழை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். 3வது முறையாக முதல்அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா உலகம் போற்றும்வகையில் ஒருகோடியே 84லட்சம் குடும்பங்களுக்கு 20கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கி வருகிறார். மாற்றத்தை தந்த மக்களுக்கு ஏற்றத்தை தரும் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார். மின்தடை பிரச்சனையில் தமிழர்களின் நலனுக்காக, உரிமைக்காக கருணாநிதி மத்திய அரசிடம் குரல் கொடுக்கவில்லை. இலங்கை தமிழ் இனம் அழிய காரணமாக இருந்தவர் கருணாநிதி. மத்தியில் அதிகாரம் கையில் இருந்தபோது இலங்கை தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாமல் மனிதசங்கிலி, போராட்டம் போன்றவற்றை நடத்தி தமிழக மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார். இலங்கையில் 85ஆயிரம் தமிழ்பெண்கள் விதவையாக காரணம் கருணாநிதி. முல்லை பெரியாறு அணைகட்டுவதில் பென்னிகுவிக்கிற்கு தமிழக மக்கள் மீது இருந்த அக்கறை கருணாநிதிக்கு இல்லை. தமிழக மக்களின் நீர்ஆதாரத்திற்காக இந்தியா குடியரசு நாடான பிறகு பிரதமரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். கச்சத்தீவு, முல்லைபெரியாறு, பாலாறு, காவிரி என தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் கருணாநிதியின் ஆட்சியில்தான் காவுகொடுக்கப்பட்டது. கூடங்குளம் மின்உற்பத்தி நிலைய பிரச்சனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறமையாக கையாண்டு சரிசெய்துள்ளார். ஆனால், அந்ததிட்டத்தை தொடங்க கருணாநிதி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மின்தேவைக்கு தேவையான மாற்று திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். வரும் ஜுன் மாதத்திற்குள் தமிழகத்தில் மின்தடை நீங்கும். தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச நேரம் கொடுக்காமல்மணி அடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க, அடுத்த வளர்ச்சிமன்ற கூட்டத்தில் மணி அடிக்கும் இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமர வைக்க வரும் பாராளுமன்ற தேர்தலில்  40தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.க.வை வெல்லமுடியாது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அரிதாஸ், முன்னாள் நகர் செயலாளர்கள் கே.சி.வரதன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், மாவட்ட பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், நகர் செயலாளர்கள் கீழக்கரை ராஜேந்திரன், பரமக்குடி ஜமால், மாவட்ட மாணவர்அணி செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony