வரும் 20-21ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 14 - மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வரும் 20, 21 தேதிகளில் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதனால் இந்தியா முழுவதும் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கும் என தெரியவந்துள்ளது. 

அகில இந்திய வங்கி அதிகாரிகளின் சங்க அவை தலைவர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது, 

வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு ஆதரவு தரும் வகையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது. தேசிய உடமையாக்கப்பட்ட 26 வங்கிகளை 7 வங்கிகளாக இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதை எதிர்க்கிறோம். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்த அதிகாரிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதை மத்திய மந்திரி சொல்லியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஸ்டேட் பாங்கு அதிகாரிகளுக்கு 6.4 சதவீத அடிப்படை சம்பள உயர்வு அளித்தது போல இதர வங்கி அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். வங்கி அதிகாரிகளின் வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும். எனவே இது குறித்து அழைத்து பேச வேண்டும். இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் சங்கமும் கலந்து கொள்கிறது. அன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் பணப் பரிவர்த்தனை இருக்காது. இதனால் ரூ. 35 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கும் என்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: