முக்கிய செய்திகள்

மீனவர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒரு நாடகமே! முத்துமணி

 

சென்னை,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைக்கவே மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளார் கருணாநிதி என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். 

தென் சென்னை மாவட்டம் மயிலை, 144 வது வட்டம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, தி.மு.க. வின் அராஜகப் போக்கு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. மயிலை பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான முத்துமணி, தென் சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி ஊழலுக்கு காரணமான தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடைபெற்று அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு அவரது முன்னாள் துறை செயலாளர் மற்றும் சிறப்பு செயலாளர் ஆகிய இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் ராசாவை காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் 4 வது நபராக இந்த விவகாரத்தில் ராசா காட்டிய சலுகையால் பெரும் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகி ஷாகித் பல்வா, கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே எந்த நேரமும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்படலாம் என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மீனவர்கள் பிரச்சினையில் தி.மு.க. தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அவசர அவசரமாக ஒரு போராட்ட அறிவிப்பை அறிவித்து சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டது எல்லாம் ஸ்பெக்ட்ரம் விசாரணையின் எதிரொலியாக சி.பி.ஐ. எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கலாம் என்று கருதியதே காரணம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் மத்தியில் திசை திருப்பவே உள்நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். 

மீனவர்களுக்காக தி.மு.க. நடத்தும் இந்த நீலிக்கண்ணீர் நாடக போராட்டம் மக்களிடையே எடுபடாது. கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை போராட்டக்காரர்கள் என்று சமீபத்தில் கருணாநிதி வர்ணித்ததை மீனவ சமுதாயம் அவ்வளவு எளிதில் மறக்காது. கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்த போது அவரை மீனவ சமுதாயமும், தமிழ்நாட்டு மக்களும் எப்படி மன்னிக்க முடியும். இந்த துரோகத்தால் தானே கச்சத்தீவு அருகில் நமது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தானே 540 மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு மீனவர்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சிங்கள படை பறிமுதல் செய்தும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளது என்பதை கருணாநிதியால் மறுக்க முடியுமா? 

மீனவர்கள் மீது இலங்கை இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று மத்திய அரசும், கருணாநிதியும் கூறிய உறுதிமொழிகள் என்னவாயிற்று? காற்றில் பறந்து விட்டதா? மீனவர்களின் அவலம் தீர கருணாநிதி ஏதாவது ஒரு உருப்படியான காரியத்தை செய்தது உண்டா? நிராயுதபாணியாக செல்லும் நமது மீனவர்களை சிங்கள கப்பல் ரோந்து படையினரின் தாக்குதலில் இருந்து தம் உயிர் காக்க தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவாரா? 

கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய கருத்தை கருணாநிதி ஏற்கிறாரா? இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஜெயலலிதா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் மத்திய அரசின் பதில் என்ன? மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதாவின் தலைமையில் அமைப்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: