இந்திய உறவை பலப்படுத்த 5 அம்ச திட்டம்: சீனா

புதன்கிழமை, 20 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், மார்ச். 21 - இந்தியாவுடன் உறவை பலப்படுத்த சர்வதேச அரங்கில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட 5 அம்ச திட்டத்தை சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலராகவும், அதிபராகவும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறியதாவது, 

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகள்(பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். 250 கோடி மக்கள் தொகை உடைய இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் மத்தியில் தங்களுக்குரிய உரிமைகளை பெற வேண்டும். இந்தியாவுடனான இருதரப்பு உறவு மிகவும் முக்கியமானதாகும். எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது எளிதல்ல. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை எல்லையில் அமைதி நிலவ செய்ய வேண்டும். 

5 அம்ச திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அரங்கில் உரிமைகளை பெறவும், நலன்களை காக்கவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களுடனான தொடர்பை பராமரிக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு மற்றும் இரு தரப்பு முதலீட்டை பெற ஒத்துழைப்பு, கலாசார உறவுகளை பலப்படுத்துதல், இரு தரப்பின் நலன்களையும் கருதி செயல்பட வேண்டும். இந்தியாவும், சீனாவும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இரு நாடுகளுக்கும் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளந. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வளர்த்து கொள்ளலாம். 

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு என தனியாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி தொடங்க வேண்டும் என்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும். மேலும் வளரும் நாடுகளுக்கு அதிக பங்கு இருக்கும் வகையில் புதிய சர்வதேச பொருளாதார முறையை ஏற்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியால் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியும் ஸ்திரமாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: