முக்கிய செய்திகள்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம்தான் அதிகம்...!

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஊழல்
Julian-Assange

 

பெர்லின், ஏப்.27 - சுவிஸ் வங்கிகளில் மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்தியர்கள்தான் அதிக அளவில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று விக்கி லீக்ஸ் இணையதள தலைவர் ஜூலியன் அசாஞ் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசாங்க தகவல்களை விக்கி லீக்ஸ் இணையதளம் அண்மையில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாருக்கும் கிடைக்காத இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு இந்த இணைய தளம் வெளியிட்டு வருகிறது.  இந்த நிலையில் இந்த இணையதளத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்தியர்கள்தான் அதிக அளவில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த கறுப்புப் பணத்தின் மூலம் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த வரி இழப்பை தடுக்க இந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஸ்விஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் ஜெர்மன் நாடு காட்டிய ஆர்வத்தை இந்திய அரசு காட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஸ்விஸ் வங்கிகளில் இந்திய குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி மட்டுமே 70 ஆயிரம் கோடிக்கு கறுப்பு பணம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

விக்கி லீக்ஸ் இணையதள தலைவர் ஜுலியன் அசாஞ் கூறியுள்ள தகவல்களை ஸ்விஸ் வங்கிகளின் கூட்டமைப்பு இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுத்துள்ளது. இந்தியர்கள்தான் ஸ்விஸ் வங்கிகளில் அதிக கறுப்பு பணத்தை குவித்து வைத்துள்ளனர் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஸ்விஸ் வங்கி கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: