முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தியும் சித்தப்பாவும் துன்புறுத்தினர்: அஞ்சலி பேட்டி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத்,ஏப்.16 - சித்தியிடமும் களஞ்சியத்திடமும் நான் அனுபவித்த சித்திரவதைகளை விரைவில் வெளியிடுவேன் என்று நிருபர்களிடம் கூறினார் நடிகை அஞ்சலி. கடந்த ஒரு வாரமாக அஞ்சலி விவகாரம் பரபரப்பாக உள்ளது. சித்தி கொடுமை, இயக்குநர் களஞ்சியத்தின் அச்சுறுத்தல் போன்றவை குறித்து கடந்த வாரம் அம்பலப்படுத்திய நடிகை அஞ்சலி, திடீரென ஹைதராபாத்திலிருந்து காணாமல் போனார். இதனால் அவர் நடிக்க இருந்த தெலுங்கு பட ஷூட்டிங்கும் தடைபட்டது. காணாமல் போன அஞ்சலியை பல இடங்களில் தேடினர். ஆனால் அஞ்சலியோ தன் சகோதரரிடம் மட்டும் அவ்வப்போது பேசி வந்தார். 

இதற்கிடையில் அஞ்சலியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பாரதி தேவி ஒருபக்கம் பேசி வந்தார். இயக்குநர் களஞ்சியமோ அஞ்சலி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அஞ்சலியை யாரோ கடத்திவிட்டார்கள், அவரை கொண்டு வந்து ஆஜர்ப்படுத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்தார். இந்த வழக்கில் 2 வாரத்துக்குள் அஞ்சலியைக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டதால், தீவிர தேடுதலில் இறங்கினர் போலீசார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென ஹைதராபாத் வடக்கு துணை கமிஷனர் சுதீர்பாபு முன்னிலையில் ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார் அஞ்சலி. போலீஸ் நிலையத்தில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அஞ்சலி நிருபர்களைச் சந்தித்தார். அவர கூறுகையில், மிகுந்த நெருக்கடியான நிலையில் இருந்தேன். இப்போதுதான் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கிறேன். நிம்மதியாக உள்ளது. இதுவரை அனுபவித்த அத்தனை சித்திரவதைகளையும் விரைவில் வெளியிடப் போகிறேன். அடித்து துன்புறுத்திய சித்தி என்னை தினமும் அடித்து துன்புறுத்துவார் என் சித்தி பாரதிதேவி. நான் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் இரவுகூட என்னை கடுமையாக அடித்தார் சித்தி. ஹைதராபாத் ஹோட்டல் அறையில் என்னுடன் தங்கியிருந்த சித்தப்பா சூரி பாபு என்னை கடுமையாகத் தாக்கினார். அடித்து துன்புறுத்தினார். அதனால்தான் அடுத்த நாள் நானாகவே வெளியேறினேன். என்னை யாரும் கடத்தவில்லை. இதன் பின்னணியில் யாரும் இல்லை. என்னால் பொறுக்க முடியாத அளவுக்கு துன்புறுத்திவிட்டனர். போலீசிலும் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டேன். ஒரு சில தினங்களில் மீண்டும் முழு வீச்சில் ஷூட்டிங்கில் பங்கேற்கப் போகிறேன். இனி யாரிடமும் என் சார்பாக தயாரிப்பாளர்களோ திரையுலகினரோ பேச வேண்டியதில்லை. என்னிடமே பேசலாம் என்றார். நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகப் போகிறார் அஞ்சலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!