முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் சொத்து முடக்கப்படும்

2G 4

 

புதுடெல்லி, ஏப்.28 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள  இரண்டு தொலைத் தொடர்பு கம்பெனிகளின் ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சட்ட அமலாக்க பிரிவு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் ஸ்வான் டெலிகாம், யுனிடெக், ரிலையன்ஸ் உள்பட பல கம்பெனிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்சில்  விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சட்ட அமலாக்க பிரிவு இயக்குனரகத்தின் சார்பாக பிரபல மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். அப்போது அவர் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட இரண்டு கம்பெனிகளின் ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்படும் என்றார். 

சட்ட அமலாக்க பிரிவு சார்பாக ஒரு அறிக்கை மூடப்பட்ட கவர்களில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றை மட்டும் வழக்கறிஞர் வேணுகோபால் கோர்ட்டில் தெரிவித்தார். ஆனால் எந்தெந்த கம்பெனிகளின் சொத்துக்கள் முடக்கப்படும் என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட இரண்டு கம்பெனிகளின் ரூ. இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள  சொத்துக்கள் விரைவில் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் இரண்டு மாதத்திற்குள் அந்த சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் வழக்கறிஞர் வேணுகோபால் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: