நாட்டின் வளர்ச்சிக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 25 - நாட்டின் வளர்ச்சிக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். பஞ்சாயத்து ராஜ் என்பது வெறும் கோஷமாக மட்டும் இருக்கக்கூடாது. நம்முடைய வாழ்க்கையில் பஞ்சாயத்து ராஜ் முறையை உண்மையானதாக இருக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தி கூறினார். மக்களிடத்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்து அவர்கள் நிர்வகிக்கும் முறையில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் குறிக்கோளை எல்லோரும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார். பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்துவதால் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுவதோடு அந்த வளர்ச்சி நிரந்தரமாகவும் இருக்கும். இந்த வழியில் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உதவும். பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த கடந்த 11-ம் ஆண்டு ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.668 கோடிதான் ஒதுக்கப்பட்டது. தற்போது 10 மடங்காக அதிகரிக்கப்பட்டு 12-ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 6 ஆயிரத்து 437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: