உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்: போப் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

வாடிகன் சிட்டி, ஜூன். 7 - கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மனிதர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 1.3 பில்லியன் டன், அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகம் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது, 

நமது முன்னோர்கள் மிச்சம் மீதி உணவுகளை வீணாக தூக்கி எறியக்கூடாது என்ற பண்பை கடைபிடித்து வந்தனர். ஆனால், தற்காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் உணவுகளை வீணடிப்பதை நாம் வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளோம். வீணடிக்கப்படும் உணவின் உண்மையான மதிப்பு நமக்கு தெரிவதில்லை. உலகெங்கும் 87 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் போது இதைப்போன்ற உணவை வீணடிக்கும் கலாசாரத்தை நாம் கைவிட வேண்டும். உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது என்பது, பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமமான செயலாகும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: