சமரச முயற்சி வெற்றி: அத்வானி ராஜினாமா வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, ஜூன். 12 - பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி பெற்றது. தனது ராஜினாமாவை அத்வானி வாபஸ் பெற்றுக் கொண்டதாக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் டெல்லியில் தெரிவித்தார். பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அக்கட்சியின் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்களோ பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் நரேந்திரமோடி விவகாரத்தை வைத்து பா.ஜ.க. வில் பூகம்பமே வெடித்து விட்டது. அத்வானியும் அவரது ஆதரவு தலைவர்களும் செம கடுப்பாகி விட்டனர். அத்வானி கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் நேற்று முன்தினம் உதறி தள்ளினார். இது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜ.க. தலைமை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது. இந்த நிலையில் அத்வானி விலகலால் ஏற்பட்ட சிக்கலுக்கு விரைவிலேயே தீர்வு ஏற்படும். இதற்கும் ஆர்.எஸ்.எஸ் சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க. தெரிவித்தது.

இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், 

அத்வானி விவகாரம் சீக்கிரமே முடிவுக்கு வரும். விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். இதற்கிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர். அத்வானி தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.  அத்வானி வீட்டில் நேற்று காலையில் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் தலைவர்கள் குவிந்திருந்தார்கள். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மேலிட பிரதிநிதி பிரகாஷ் ஜவ்டேகர், அது பற்றி கூறுகையில், 

எல்லா தலைவர்களுமே அத்வானியோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்த சிக்கலுக்கு விரைவில் தீர்வு ஏற்படும். பா.ஜ.க மீண்டும் எழுச்சி பெறும். வலிமை பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். 

முன்னதாக நேற்று அத்வானி இல்லத்திற்கு கட்சி தலைவர்களான உமா பாரதி, நிதின் கட்காரி ஆகியோர் சென்று அவரை சமாதானப்படுத்தினர். அத்வானி வீட்டுக்கு செல்லும் முன்பு உமா பாரதி, சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் அத்வானிக்கு போன் செய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இப்படி பல்வேறு தலைவர்களும் மேற்கொண்ட முயற்சி ஒரு வழியாக வெற்றி பெற்றது. அத்வானி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்று விட்டதாக நேற்று மாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தலைவர்கள் கோரிக்கையை ஏற்று அவர் இந்த முடிவுக்கு வந்ததாகவும், எனவே பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டியின் போது உமா பாரதி, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் உடன் இருந்தனர். ஆனால் அத்வானி இந்த பேட்டியில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அத்வானிக்கு அறிவுரை கூறினாராம். கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து தொடர்ந்து பதவியில் நீடித்து வழிகாட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டதை அத்வானி ஏற்றதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அத்வானியின் இந்த முடிவை நரேந்திர மோடியும் வரவேற்றுள்ளார். அவரது இந்த முடிவை முழு மனதோடு வரவேற்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: