முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிரந்தரமாக நீக்குங்கள்: தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - கட்சியிலிருந்து தற்காலிகமாக நிக்கப்பட்ட அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள்  நிரந்தரமாக எங்களை நீக்குங்கள் என்று விஜயகாந்துக்குப் பதில் அறிவித்துள்ளனர். தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தொகுதி மேம்பாடு குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார்கள்.

நடந்து முடிந்த டெல்லி மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதையடுத்து 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் 'தங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை அடுத்தமாதம் (ஜூலை) 10-ந்தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அதிருப்தியாக நாங்கள் செயல்பட தொடங்கி பல மாதங்கள் ஆகிறது. இப்போதுதான் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். எந்த முடிவையும் விஜயகாந்த் வேகமாக எடுக்க மாட்டார் என்பதற்கு இதுவே உதாரணம். உதிர்ந்த ரோமம் என்றெல்லாம் எங்களை வர்ணித்தார்கள். கட்சியில் இருந்து எங்களை நீக்குவதற்கு தயக்கம் ஏன்? தற்காலிக நீக்கமே மகிழ்ச்சி அளிக்கிறது. நிரந்தரமாக நீக்கினால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்த நாடகத்தை முடித்து வைப்பேன் என்றார் விஜயகாந்த். இதுவரை முடிக்க முடியாமல் திணறுகிறார். எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும் என்பதற்காகத்தான் எங்களை கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கிறார். எதையும் சுய நலத்தோடுதான் சிந்திப்பார்.

தமிழழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

என்னுடைய கொடும்பாவியை கொளுத்தினார்கள். எனது திட்டக்குடி தொகுதியில் கூட்டம் போட்டு தடித்த வார்த்தைகளால் திட்டினார்கள். இத்தனைக்கு பிறகும் தே.மு.தி.க.வுக்கு எப்படி வாக்களிக்க கேட்டார்கள்? தற்காலிகமாக நீக்கியதன் மூலம் இப்போது ஒரு வேளை சாப்பிட கூடியவனாக மாறி உள்ளேன். நிரந்தரமாக நீக்கினால் 3 வேளை சாப்பிடுபவனாக மாறிவிடுவேன். எனவே என்னை நிரந்தரமாக நீக்கும் நல்ல முடிவை அவர் எடுக்க வேண்டும்.

சாந்தி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஏ.ஆர்.இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கும் போது நடைபெற்ற எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை. பிறகு ஏ.ஆர். இளங்கோவனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மட்டும் எங்களிடம் எப்படி கோரிக்கை வைக்கலாம்? தே.மு.தி.க.வுக்காக பாடுபட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இளங்கோவன் பெயரை அறிவித்தார். தற்காலிகமாக நீக்கியதாக கூறுகிறார்கள். நிரந்தரமாக நீக்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony