முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் மோர்ஸி ஆதரவாளர்கள் - ராணுவம் மோதல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, ஜூலை. 10 - எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகமது மோர்ஸி ஆதரவாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 51 பேர் உயிரிழந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜனநாயக முறைப்படி எகிப்து அதிபராக மோர்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மோர்ஸிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து மோர்ஸியை அதிபர் பதவியில் இருந்து ராணுவம் நீக்கியதுடன் அவரை சிறை வைத்தது. அவருடன் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் சிறை வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தின் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராணுவ அதிகாரி உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில்தான் மோர்ஸி சிறை வைக்கப்பட்டுள்ளார். 

போராட்டத்தின் போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 200 பேரை ராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ராணுவத்தின் அறிக்கையை முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு மறுத்துள்ளது. மோர்ஸிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 42 பேர் உயிரிழந்தனர். 485 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சி இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

எகிப்திலும் சிரியாவை போல மனித படுகொலை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒரு புறம் மோர்ஸிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றாலும் ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், எகிப்து முழுவதும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்கிடையே புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞர் ஜியாத் பஹா எல்டினை பிரதமராக தேர்ந்தெடுக்க இடைக்கால அதிபர் அட்வி மன்சூர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது போல் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது எல்பரதேவை துணை அதிபராக தேர்ந்தெடுக்கவும் மன்சூர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்