வலிமையான இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை.22 - வலிமையான இந்தியாவை உருவாக்குவது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை என்றும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழிகாட்டியாக உள்ளது என்பது தவறான கருத்தாகும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.  

      ஆர். எஸ்.எஸ்.இயக்கம் பற்றி சமூகத்தில் தவறான கருத்து நிலவகிறது. அதன் முக்கியமான கொள்கை என்ன என்பதையும், அதன் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அறியாமல் சிலர் பேசி வருகின்றனர். வலிமையான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் கொள்கை என்றும் அவர் கூறினார். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

இந்துத்துவா என்பது ஒரு சமூகத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ உரியது அல்ல. அப்படிப் பார்ப்பது தவறானதாகும். நல்ல கருத்து உள்ள சமூகத்தில் மாற்றம் ஏற்படாதவரை, ஒரு தலைவரோ அல்லது ஒரு கட்சியோ நாட்டுக்கு சிறிதளவே நல்லது செய்ய முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. 

மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிக்கிறது. சரியான, தீர்க்க தரிசனமான தலைவர் ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்கும் முன்பாக சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கமாகும்.

மாற்றம் என்பது  எப்போதும் கட்சியில் அல்ல, சமூகத்தில்தான்  வரும். ஆட்சியில் உள்ளவர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. இந்துத்துவா கொள்கை மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே தற்போதைய தேவையாகும். சீர்திருத்தம் மூலம் மாற்றம் கொண்டு வந்து வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும்.

சமூகத்தில் உள்ள கெட்டவைகளை அகற்றி அதன் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் தனது வாழ்நாள் முழுவதும் சபதம் ஏற்க வேண்டும் என்று 1940-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தின்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவர் கூறினார் என்றார் மோகன் பகவத்.

இதை ஷேர் செய்திடுங்கள்: