செல்வந்தர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் நீக்கம்

Image Unavailable

 

புதுடெல்லி, டிச.4 - உலக செல்வந்தர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரை நீக்கி, அது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறது, 'ஹஃப்பிங்டன் போஸ்ட்' செய்தி வலைத்தளம்.

 

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்ற தலைப்பில் அமெரிக்காவின் 'ஹஃப்பிங்டன் போஸ்ட்' செய்தி வலைத்தளம் பட்டியல் ஒன்றை வெளியிட்டது.

 

அதில், பிரிட்டிஷ் ராணியைவிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செல்வந்தர் என்றும், 12-வது இடம் அளிக்கப்பட்டிருந்த அவரின் சொத்து மதிப்பு 200 கோடி அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், ஹஃப்பிங்டன் போஸ்ட் ஆசிரியர் இன்று வெளியிட்ட செய்தியில், சோனியா காந்தி, கத்தாரின் முன்னாள் ஆட்சியாளர் ஹமித் பின் கலிபா அல்-தானி ஆகியோரின் பெயர்களை உலகின் மிகப் பெரிய செல்வந்தர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டோம்.

 

வலைத்தளம் ஒன்றின் தகவல்களின் அடிப்படையில் சோனியா காந்தியின் பெயரை அந்த பட்டியலில் சேர்த்திருந்தோம். அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சோனியா காந்திக்கு உள்ள சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை எங்களால் சரிபார்க்க இயலவில்லை. இதைத் தொடர்ந்து பட்டியலில் இருந்து அவரின் பெயரை நீக்கிவிட்டோம். இந்த விவகாரத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், இதுபோன்ற முட்டாள்தனமான, பொருத்தமில்லாத தகவல்களை வெளியிட்டு வந்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். அந்த இணையதளம் வெளியிட்ட பட்டியல் பற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ