முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் - 12 - தமிழக மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அனைவரும் உணர்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு:- தற்போது சுதந்திரம் அடைந்து விட்டதாக தமிழக மக்கள் அனைவரும் உணர்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக மக்களுடைய அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு இருந்தன. கடந்த 5 ஆண்டு காலமாக பத்திரிகைகளும் ஊடகங்களும்கூட இந்த அடக்கு முறையை அனுபவித்தன. உண்மையான விவரங்களைக் கூட வெளியிடுவதற்கு அனுமதி வழங்காத ஒரு நிலைமை இருந்தது. உண்மையை வெளியிட பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி தேவையில்லை. அதுதான் ஜனநாயகம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை சூழ்நிலை நிலவியது. உதாரணத்துக்கு ஒருசிலவற்றை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

இதே சட்டப் பேரவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு முறை நான் இங்கே பேசியபோது, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை குறிப்பிட்டேன். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, என்று நான் சொல்லிவிட்டு அதன் பிறகு நான் வெளியேறி விட்டேன். நான் சென்ற பிறகு அன்றைய முதல்வர் கருணாநிதி இந்த பாடலை குறிப்பிட்டு ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியது தன்னைத் தான் - அதாவது கருணாநிதியைத்தான் என்று குறிப்பிட்டு - அவர் என்னைச் சொல்லவில்லை - ஏனென்றால் ஒரு தலைவி இருக்கிறாள் என்று சொல்லவில்லை, ஒரு தலைவன் இருக்கிறான் என்று தான் சொல்லி இருக்கிறார், ஆகவே ஜெயலலிதாவை அவர் குறிப்பிடவில்லை என்று அவர் சொன்னார். நான் வெளியே சென்ற பிறகு தான் இதைக் கேள்விப் பட்டேன். அதற்கு நான் பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, திருவளர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ என்று பாடியிருக்கிறார். ஆகவே, அதில் என்னைத் தான் குறிப்பிடுகிறார். அவருடைய அரசியல் வாரிசு நான் தான் என்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார் என்று நான் பதிலடி கொடுத்தேன்.

ஆனால், இது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. இப்படி புத்திசாலித்தனமாக சொன்னதற்கு உடனடியாக ஜெயலலிதா பதிலடி கொடுத்து விட்டாரே என்று அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி இந்த செய்தியை வெளியிடக் கூடாது என்று கட்டாயப் படுத்தியிருக்கிறார். ஆக இந்த அளவுக்கு அற்பத்தனமான காரியங்களில், அற்பத்தனமான சிந்தனையில் அந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரே செயல் பட்டிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான் இதை நான் குறிப்பிடுகிறேன்.

கடந்த ஆண்டு நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோது வரிசையாக பல பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களை நடத்தினேன். கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரம்மாண்டமான அளவில் மக்கள் திரண்டனர். அனைத்து பத்திரிகைகளும் அந்த கூட்டத்தைப் பற்றி பிரமாதமாக செய்திகளை வெளியிட்டன. உண்மையை சொன்னார்கள். 8 லட்சம் பேருக்கு மேல், 9 லட்சம் பேருக்கு மேல் அங்கே கூடிவிட்டார்கள் என்ற உண்மையைச் சொன்னதால் கருணாநிதிக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.

அடுத்து ஒன்றரை மாத காலத்துக்குள் திருச்சியிலே ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினேன். கோவையில் திரண்ட கூட்டத்தை விட மூன்று மடங்கு அதிக கூட்டம் அங்கே திரண்டது. கோவையிலே ஒரு 7 லட்சம் பேர் திரண்டார்கள் என்றால் திருச்சியிலே 21 லட்சத்துக்கு மேல் கூட்டம் கூடிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அன்றைய கால கட்டத்தில் கருணாநிதி அனைத்து பத்திரிகைகளையும் மிரட்டி, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் ஒரு பத்திரிக்கை கூட திருச்சியில் நடந்த கூட்டத்தைப் பற்றி செய்தியை வெளியிடவில்லை. ஒருசில பத்திரிகைகளில் ஜெயலலிதா திருச்சிக்கு சென்றார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், சென்னை திரும்பினார் என்று மட்டும் போட்டார்களே தவிர, சில பத்திரிகைகளில் செய்தியே போடவில்லை. எந்த பத்திரிகையிலும் உண்மையை வெளியிடவில்லை. இங்கே பிரம்மாண்டமான மக்கள் கூட்டம், மகத்தான மக்கள் கூட்டம் கூடியது என்ற செய்தியை வெளியிடவில்லை. அதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஆகவே அந்த அளவுக்கு ஒரு பயம், ஒரு அச்ச உணர்வு, ஒரு அடக்குமுறை இருந்தது. பத்திரிகைகள் ஏன் பயப்பட வேண்டும்? பத்திரிகை முதலாளிகள் முதலமைச்சரைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்டால் அது அவர்களுக்கு தான் தெரியும். என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட ஒரு அடக்குமுறை அப்போது நிலவியது.

அது மட்டுமல்ல, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரை எனக்கு சாதகமான கழகத்துக்கு சாதகமான எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று பத்திரிகைகளுக்கு ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர் போடப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, சட்டமன்றத்துக்கு நான் எப்போது வந்தாலும் என்னை பேச விடாமல் முதலமைச்சரும் சரி, அத்தனை தி.மு.க. அமைச்சர்களும் சரி, அடிக்கடி எழுந்து குறுக்கிடுவது மட்டுமல்ல, அவமானப் படுத்தி, கொச்சைப் படுத்தி, அசிங்கப் படுத்தி பேசினார்கள். அது மட்டுமல்ல, அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன், நான் ஆரம்பத்தில் சட்டமன்றத்துக்கு வந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தபோது மரபுபடி பதில் வணக்கம் தெரிவித்தார். அதுகூட அன்றைய முதல்வருக்கு பொறுக்கவில்லை. தனியாக அழைத்து ஆவுடையப்பனை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார் போலும். அதன் பிறகு நான் சட்டமன்றத்துக்கு வந்து வணக்கம் தெரிவித்தால் கூட, பதில் வணக்கம் கூட தெரிவிக்காமல் சபாநாயகர் முகத்தைத் திருப்பிக் கொள்வார். இப்படி ஒரு சூழ்நிலையை ஒரு ஜனநாயக நாட்டில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த சட்டமன்றத்திலாவது கேள்விப் பட்டிருக்கிறோமா?

இன்றைய தினம் நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பாக பழகுகிறீர்கள், கண்ணியத்துடன் பழகுகிறீர்கள். ஆனால் அன்றைய நிலைமை என்ன? அதை நீங்களே கண்கூடாக பார்த்திருக்கிறீர்கள். இதையெல்லாம் இன்றைக்கு எதற்காக சொல்கிறேன் என்றால், அனைவரும் வெறுப்படையக் கூடிய ஒரு சூழ்நிலை தான் கடந்த 5 ஆண்டு காலமாக இங்கு தமிழகத்தில் நிலவியது. சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அனைவரையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். நான் ஒரு முன்னாள் முதலமைச்சர், எதிர்க் கட்சி தலைவர், எனக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அதனால் தான் மக்கள் இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சி எப்போது ஒழியும்? இதற்கு எப்போது நாம் வழி செய்யலாம்? என்று காத்திருந்தார்கள்.

கடந்த 5 ஆண்டுகாலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. யாருக்கும் எந்தவிதமான சுதந்திரமும் இல்லை. மக்கள் வேறு எதை விரும்புகிறார்களோ இல்லையோ, எந்த நாட்டிலும் சரி, பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். இந்தியா என்று மட்டுமல்ல, எந்த நாட்டிலும் அதே தான். அதனால் தான் முசோலினி, ஹிட்லர், இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு மேல் அவர்களுடைய நாட்டு மக்களாலேயே தூக்கி எறியப்பட்டார்கள். அதைப் போலவே, கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரி கருணாநிதியின் குடும்ப ஆட்சியை தமிழக மக்கள் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்.

இனி தமிழ்நாட்டில் அத்தகைய ஒரு நிலைமை எந்த காலத்திலும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை அ.தி.மு.க. சார்பில் தமிழக மக்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago