முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும்-பிரதமர் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 4 - பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால் விலைவாசிகள் உயர்ந்து ஏழை,எளிய மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுன்றத்தில் கொண்டுவரக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து சமாளிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. அதன்படி லோக்பால் மசோதாவுக்கான அம்சங்களை தயார் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 பேர் அரசு பிரதிநிதிகளும் மீதி 5 பேர் சிவில் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். சிவில் பிரதிநிதிகள் அண்ணா ஹசாரே தலைமையில் செயல்பட்டனர். லோக்பால் மசோதாவுக்கு அம்சங்களை அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் உருவாக்கினர். லோக்பால் மசோதா அதிகாரத்தின்கீழ்  பிரதமர், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களையும் கொண்டு வர வேண்டும் என்று சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்சங்கள் உருவாக்குவது தொடர்பாக சிவில் பிரதிநிதிகளும் அரசு பிரதிநிதிகள் 9 தடவை சந்தித்து பேசினர். அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்காவிட்டால் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் தாம் கூறும் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுக்கும்படி எல்.கே.அத்வானி உள்பட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கல், அஜீத்சிங், நிதீஷ்குமார் உள்பட பல முக்கிய தலைவர்களை ஹசாரே சந்தித்து பேசினார். சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார்.
லோக்பால் மசோதாவில் அம்சங்கள் சேர்ப்பது குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி ஆகியோர் உள்பட தலைவர்கள் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தார். இந்த மசோதாவானது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஒரு மசோதாவாக இருக்கும். அரசு அமைப்புகளுடன் இணைக்கமாக செயல்படும் வகையிலும் இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுகையில் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்கு கீழ் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருந்தபோது லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அ.தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். சிவில் உறுப்பினர் அண்ணாஹசாரேவும் கலந்துகொண்டார்.    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்