முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிசாட் -12 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      வர்த்தகம்
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா,ஜூலை.16 - ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 17 ராக்கெட் மூலம் ஜி சாட் 12 செயற்கை கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  தகவல் தொடர்புக்கான ஜி சாட் 12 எனும் செயற்கை கோளை இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த செயற்கை கோளை ராக்கெட்டுடன் இணைக்கும் பணி கடந்த 12 ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடந்தன. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு இந்த ராக்கெட் கொண்டு வரப்பட்டது. செயற்கை கோளுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை பறக்க விடுவதற்கான 53 மணி நேர கவுண்டவுன் கடந்த 13 ம் தேதி காலை 11.48 க்கு தொடங்கியது. கவுண்டவுன் நேற்று மாலை 4.48 உடன் நிறைவடைந்தது. 

அதன் பின்னர் ராக்கெட் விண்ணில் பறந்தது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதியிருந்த படி ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது. கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஜி சாட் 4, ஜி சாட் 5 என்ற இரண்டு செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட போது தோல்வியடைந்து கடலில் விழுந்தன. எனவே நேற்று ஏவப்பட்ட ராக்கெட் விஷயத்தில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தினார்கள். ஜி சாட் 12 செயற்கை கோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகளாகும். 

இந்த ஜி சாட் 12 ல் டெலிபோன் சேவை, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் மருத்துவ சிகிச்சை, கல்வி ஆகியவைகளை மேம்படுத்துவதற்கான அதி நவீன வடிவமாக இதனை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். 1410 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 12 சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி. சி. 17 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து நேற்று பறந்தது. 

நேற்று அனுப்பப்பட்ட ராக்கெட் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, வழக்கமாக அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டில் 9 டன் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். ஆனால் பி.எஸ்.எல்.வி. எக்ஸ். எல். ரக ராக்கெட்டில் 12 டன் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. 2008 ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற செயற்கை கோள் அனுப்பிய போது எக்செல் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 90 கோடியாகும். இது அனுப்பப்படும் ஜிசாட் 12 செயற்கை கோளின் மதிப்பு ரூ. 80 கோடியாகும். இரண்டுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை. திட்டமிட்டபடி நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ராக்கெட் அனுப்பப்படுவதற்கு முன்னர் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலுக்கு சென்று ராக்கெட் மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். அதே போல காளகஸ்தி கோயிலுக்கும் இவர்கள் சென்று வழிபாடு நடத்தினர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வகைகளில் இது 19 வது ராக்கெட்டாகும். நேற்று செலுத்தப்பட்ட செயற்கை கோள் அதிக எடை கொண்டதாகும். இதனை சிறிய வகை ராக்கெட் மூலம் அனுப்பி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்