முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபாட்டில் விற்பனை: தி.மு.க. பெண் அவைத்தலைவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.17 - சென்னையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த தி.மு.க. பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

சென்னையில் டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் பூக்கடை அருகே சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் தஞ்சை முருகப்பா தெரு அருகே மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த சுதா(48), மீனா(57) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 27 குவார்ட்டர் பாட்டில்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரும் வால்டாக்ஸ் சாலையில் வசித்து வருகிறார்கள். 

இதேபோல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த  மயிலாப்பூரை சேர்ந்த பூபதி(49), அருண்(19) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 90 குவார்ட்டர் பாட்டில்களை கைப்பற்றினர். 

இதேபோல் மதுவிலக்கு உதவி ஆணையர் கே.ஜி.நரசிம்மவர்மன் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் எச்.சுரேஷ்குமார், பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை நேற்று அதிகாலையில் போர் நினைவு நினைவு சின்னம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் கையில் ஒரு மூட்டை வைத்திருந்தனர். போலீசார் அவைகளை சோதனையிட்டபோது, அந்த மூட்டையில் 48 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. 

விசாரணையில் அந்த மதுபாட்டில்கள் அனைத்தும் பாண்டிச்சேரியில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவை என்றும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள்(52) என்பதும், வேளச்சேரி பகுதி தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது. அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அவரது மருமகன் சேவியர் (27) என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட தி.மு.க. பகுதி அவைத் தலைவர் மாரியம்மாளிடம் மேலும் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் வீட்டில் மதுபாட்டில் குடோன் வைத்து பாண்டிச்சேரியிலிருந்து போலி மதுபாட்டில்களை வாங்கி வந்து போலி லேபிள்களை ஒட்டி விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது. 

மாரியம்மாள் வீட்டிலிருந்து 6 ஆயிரம் போலி மதுபாட்டில்களையும், ஒட்டுவதற்காக வைத்திருந்த போலி எக்சைஸ் லேபிள்களையும் போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். இதையொட்டி தி.மு.க. பகுதி அவைத் தலைவர் மாரியம்மாளும், அவரது மருமகனும் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்