முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொற்குவியலை கணக்கிட மன்னர் குடும்பம் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக.14 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள கடைசி பி நிலவறையை திறப்பதற்கு மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொற்குவியலை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடைசியாக பி அறையைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பி அறையை திறப்பதற்கு முன்பு தேவ பிரசன்னம் நடத்த முக்கியஸ்தர்களால் முடிவு செய்யப்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்கலை மதிப்பீடு செய்யக்கூடாது என்றும் பி நிலவறையை திறக்கக்கூடாது என்றும் பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை மீறி நடப்பவர்களின் வம்சமே  விஷ ஜந்துக்களால் கடிக்கப்பட்டு அழிந்துவிடும் என்றும் எச்சரித்தனர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழுவின் தலைவர் ஆனந்தபோஸ் தலைமையில் வருகிற 25 ம் தேதி திருவனந்தபுரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது, நிலவறையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. 

இந்த நிலையில் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசான உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா, ராமவர்மா ஆகியோர் பி நிலவறையை திறப்பதற்கு தொடர்ந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொற்குவியலை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேவ பிரசன்னத்தில் ஜோதிடர்கள் கூறியபடிதான் நடந்துகொள்ள வேண்டும். பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் தேவபிரசன்னம் ஆச்சார விதிகளுக்கு எதிரானது என்று மடாதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள முஞ்சறை மடத்து தந்திரிகள் இதுகுறித்து கூறுகையில், எங்கள் மடத்தின் தந்திரியான புஷ்பாஞ்சலி தந்திரியிடம் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு முன்னால் அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஆனால் யாரும் முறையாக அனுமதி கேட்கவில்லை. மேலும் எங்கள் மடத்தின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இதுகுறித்து மன்னர் குடும்பத்திடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் முஞ்சறை தந்திரி மடத்தின் புஷ்பாஞ்சலி தந்திரிதான் சிறப்பு பூஜைகளை நடத்திவந்தார். காலப்போக்கில் அதுவும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை எடுத்து கணக்கிடும்பணி துவங்கியது. நியாயமாகப் பார்த்தால் முன்னதாகவே தேவ பிரசன்னம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பி நிலவறையை திறப்பதற்கு முன்புதான் எங்களிடமும் அனுமதி பெறாமல் தேவப்பிரசன்னமும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர அவசரமாக ஜோதிடம் பார்க்காமலேயே இந்த பிரசன்னம் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 அறைகளையும் ஆச்சார விதிகள் பின்பற்றப்படாமலும், பூஜைகள் எதுவும் நடத்தப்படாமலும் திறக்கப்பட்டுள்ளது. இதுவும் நாட்டுக்கு பெரும் கேடுதான். இதை உணராமல் தேவ பிரசன்னம் ஆச்சார விதிகளை கடைப்பிடிக்காமல் நடத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!