முக்கிய செய்திகள்

மருந்து தயாரிப்பில் நேர்மை வேண்டும்: ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், செப்.6 - மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நீதி நெறிகளுக்கு உட்பட்டு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனமும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து 71 வது ஆண்டு மாநாட்டை நடத்தின. இதில் பங்கேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பேசியதாவது:-
மருந்து தயாரிப்பு தொழில் என்பது மருத்துவத் தொழில் போன்று புனிதமானது. மக்களின் உடல் நலம், உயிர்ப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கியுள்ளது. எனவே இதில் பாதுகாப்பும், தரமும் மிகமிக முக்கியத்தும் வாய்ந்தது. இவற்றில் அதிக கவனம் செலுத்துவது நிறுவனங்களின் பொறுப்பு. எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நீதி நெறிகளுக்கு கட்டுப்பட்டு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். போலி மருந்துகளையும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மருந்துகளையும் தயாரிப்பது குற்றமாகும். உலக அளவில் 50 சதவீத மருந்துகள் தவறான முறையிலேயே விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே மருந்துகளை உட்கொள்வோருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்திய மருத்துவத் துறையில் இந்த ஆண்டு ரூ. 56,400 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2015 ல் இது 94 ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவ அறிவியல், மருந்து தயாரிப்புத் துறை மிக வேகமாக வளர்ந்து வந்தாலும், நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சரியாக மருந்து கிடைக்காததால் பல்வேறு நோய்களில் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைவருக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் ஏழை எளிய மக்கள் எளிதில் வாங்கும் விலையில் மருந்துகள் இல்லை. எனவே அனைவரும் வாங்கக்கூடிய விலைகளில் மருந்துகளை விற்க முன்வர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: