முக்கிய செய்திகள்

மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம்: முத்துமணி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப்.24 - அண்ணா வழியில் ஜெயலலிதா தலைமையில் மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம் என்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் 103 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது:-

முதல்வரின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட அரசியல் வரலாற்றில் அண்ணா ஒரு அத்தியாயம். தனது இறுதி மூச்சுவரை தமிழினத்திற்கு வழிகாட்டியாக, தமிழ்மொழி வளர்ச்சிக்கு காரணமாக, தமிழினத்திற்கு பாதுகாப்பாக விளங்கியவர் அண்ணா. இதனைத் தொலைநோக்கு பார்வையில் எண்ணிப்பார்த்த நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவருடைய உருவத்தை கழகக் கொடியில் இணைத்தார். பெயரை கட்சியிலும் இணைத்தார். அண்ணாவுக்கு நிரந்தர புகழாரம் சூட்டியவர் எம்.ஜி.ஆர். 

அண்ணா 1909 செப்டம்பர் திங்கள் 15 ம் நாள் வரலாற்று புகழ்மிக்க காஞ்சியில் பிறந்து காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் முடித்தார். 1929 ல் தமது 20 வது வயதில் செங்கல்பட்டில் நடைபெற்ற பெரியாரின் சுயமரியாதை மாநில மாநாட்டில் பார்வையாளராக கலந்துகொண்டார் அண்ணா. 1935 ல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் முதன்முதலாக தந்தை பெரியாரை சந்தித்து பேசிய அண்ணா, தாம் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறினார். 1939 ல் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் அண்ணா பொதுச் செயலாளராகவும் ஆனார்கள். 1944 ல் சேலம் மாநாட்டில் அண்ணா கொண்டுவந்த தீர்மான அடிப்படையில் நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. உலக வரலாறு மற்றும் அரசியலைப் பற்றி கற்றறிந்த அண்ணா, அரசியல் அதிகாரத்தை பெற்றால்தான் தந்தை பெரியாரின் கொள்களைகளை நிறைவேற்ற முடியும் என்றும் அத்தோடு ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர முடியும் எனும் ஆழமான கருத்தை தனது இதயத்தில் கொண்டிருந்த அண்ணா, புதிய இயக்கமான தி.மு.க.வை 1949 ல் துவக்கினார். 

தனது இயக்கத்திற்கு தலைவர் பதவி காலியிடமாகவே இருக்கும் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் அதனை காலியிடமாகவே வைத்திருந்தார் அண்ணா. ஆனால் திராவிட இயக்கத்தின் கரும்புள்ளியான கருணாநிதி, முதல் அமைச்சர் ஆன பிறகு கட்சி தலைவர் பதவியையும் எடுத்துக்கொண்டார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தாரை கருணாநிதி எட்டிப்பார்க்கவில்லை. எனவே கருணாநிதிக்கு அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட எந்த தகுதியும் இல்லை. அண்ணாவுக்கும் நமது முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இயற்கையான பல அரசியல் ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். இருவருக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை எண் 185. 1962 ல் அண்ணாவின் கன்னிப்பேச்சை கேட்ட பிரதமர் நேரு, அண்ணாவைப் பாராட்டியதுபோல மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் சரளமான ஆங்கிலப்பேச்சைக் கேட்ட இந்திரா காந்தி அவரை பெரிதும் பாராட்டினார்.

அண்ணா மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் தேவை என்று வலியுறுத்தினார். திட்டங்களைப் பெற்று வளர்ச்சி பெறுவதில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று மத்திய ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டி பேசினார். அதைப்போல மேலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்பதையும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளான பெரியாறு அணை பிரச்சனை, கச்சத்தீவை திரும்பப் பெறும் பிரச்சனை போன்றவற்றில் போர்க்குரல் எழுப்பி, மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர் நமது ஜெயலலிதா. தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், மீனவர் பிரச்சனையிலும், ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாராமுகமாய் இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிற மத்திய காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது பர்மாவையும், இலங்கையையும் தனி நாடுகளாக பிரித்துக் கொடுத்தார்கள். இலங்கையை சிங்களர் வசம் ஒப்படைத்தார்கள். சிங்கள அரசு புதிய அரசமைப்பு சட்டம் கொண்டுவந்தது. இதன்மூலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இருந்துவந்த   அடிப்படை உரிமைகள், கல்வி உரிமை, மத உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஈழத்தந்தை சிவா பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக அகிம்சை வழியில்  25 ஆண்டுகாலம் போராடியும் எந்த பயனும் இல்லாததால், போராளிக் குழுக்கள் போராட்டங்களை நடத்தின. இலங்கையின் குடியரசு தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஈழத் தமிழர்களின் மொழி உரிமையை பறித்தபோது தமிழக முதல்வராக இருந்த அண்ணா, ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டுமென வலியுறுத்தி அதன் பொதுச் செயலாளருக்கு தந்தி அனுப்பினார். ஈழத் தமிழர் உரிமை மீட்க எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நிதியுதவி வாங்கித் தந்தும், போராளிகள் உரிய பயிற்சி பெறவும் உதவினார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்து தமிழினப் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜ பக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உலக நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். கச்சத்தீவை திரும்பப் பெறவும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி உள்ளார். சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு இந்திய தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தம்மைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். அதற்கு பயனும் கிடைத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஜனாதிபதி மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, ஒரு சாதாரண ஏழை, உழைக்கும் மக்கள், விவசாய பெருமக்கள் எல்லாம் அரசியல் அதிகாரம் பெற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக மத்திய மாநில அமைச்சர் பெருமக்களாகவும் வருவதற்கு அடித்தளம் வகுத்தவர் பெருந்தகை அண்ணா. அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் தமிழக மக்களின் நலன்காக்கவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவரவும் அல்லும் பகலும் கண் துஞ்சாது உழைத்துவரும் தமிழ்நாட்டின் பொற்கால முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் கரத்தை வலுப்படுத்துவோம். என்றென்றும் ஜெயலலிதாவின் தலைமையில் அண்ணாவின் கொள்கை வழி நடப்போம். மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம். 

இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: