முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன் டென்னிஸ் கனடா வீரர் ரோனிக் ஒற்றையர் சாம்பியன்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.- 9 - சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  கனடா வீரர் மிலோஸ் ரோனிக், செர்பிய வீரர் ஜான்கோ திப்சரவிக்கை அதிர்ச்சி தோல்வியடையச்செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் கடந்த 2ம் தேதி துவங்கி நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஜான்கோ திப்சரவிக்கும், கனடா வீரர் மிலோஸ் ரோனிக்கும் மோதினர். கனடா வீரர் மிலோஸ் ரோனிக் உலக ரேங்கிங்கில் ஒற்றையரில் 31வது வீரராக வரிசைப்படுத்தப்பட்டவர். சென்னை ஓபனில் 4வது நிலை வீரராக வரிசைப்படுத்தப்பட்ட ரோனிக், தனது முதல் சுற்றில் பை பெற்று, 2வது சுற்றறில் ஹானஸ்குவையும், காலிறுதி ஆட்டத்தில் டுடி சேலாவையும் வீழ்த்தி அரையிறுதியில் அல்மக்ராவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தனது அபார ஏஸ் சர்வீஸ்கள் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ரோனிக், ஆட்டம் துவங்கியது முதலே தனது ஏஸ் சர்வீஸ் ஆதிக்கத்தை தொடர்ந்தார். வழக்கமாகவே, மணிக்கு 200கி.மீ. வேகத்துக்கு மேல் சர்வீஸ் செய்யும் இவர், நேற்றைய ஆட்டத்தில் அதைவிட கூடுதலாகவே சர்வ் செய்தார்.

உலக ரேங்கிங்கில் 9வது வீரராக வரிசைப்படுத்தப்பட்டவரும், சென்னை ஓபனில் முதல் நிலை வீரராக வரிசைப்படுத்தப்பட்டவருமான திப்சரவிக் தனது அனுபவ, அபார ஆட்டத்தின் மூலம் பல முறை புள்ளிகள் சேர்த்தார். குறிப்பாக ரோனிக்கும், திப்சரவிக்கும் தங்களது ஒரு சர்வீஸ் வாய்ப்பைக்கூட தவறவிடாமல் தக்கவைத்ததால், இருவருமே தொடர்ச்சியாக கேம்களை வென்றனர். முதல் செட் ஆட்டம் 6க்கு6 என்ற கேம்களில் சமநிலை ஆனதால் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் திப்சரவிக்க 7க்கு4 என்ற புள்ளிகளில் வென்றார். 2வது செட் ஆட்டமும், இதனைத்தொடர்ந்து நடந்த 3வது செட் ஆட்டமும் டைபிரேக்கரிலேயே முடிவு செய்யவேண்டியதாயிற்று.  அந்த இரண்டு செட்டிலுமே ரோனிக் தலா 7க்கு4 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார். ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாகவும், ரோனிக் மற்றும் திப்சரவிக்குக்கு மாரத்தான் போட்டியாகவும் அமைந்த இதில் மிலோஸ் ரோனிக் 6க்கு7, 7க்கு6, 7க்கு6 என்ற கேம்களில் வெற்றி பெற்று ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னை ஓபனில் முதல்முறையாக ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள ரோனிக், இப்போட்டியைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் ஜி.ஏ.ராஜ்குமார் பரிசு வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்