முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை புறக்கணிக்கும் ம.தி.மு.க.வின் முடிவு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது- ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 21 - சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ம.தி.மு.க. எடுத்துள்ள முடிவு தமக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13 ம்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. காரணம், இந்த முறை எல்லா தரப்பிலுமே கூட்டணி குழப்பங்கள் நீடித்தன என்று தான் சொல்ல வேண்டும். காங்கிரசுடன் உறவை முறிப்பதாக தி.மு.க. நாடகம் நடத்தியது. பின்னர் இந்த நாடகம் நான்கு நாட்களில் முடிந்து மீண்டும் அந்த கூட்டணி ஏற்பட்டு தற்போது தொகுதி பங்கீடு வரை முடிந்திருக்கிறது. 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க, 2 கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமார் கட்சி, சேதுராமன் கட்சி,புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை, குடியரசு கட்சி போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் விஷயத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அந்த பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது. ஜெயலலிதாவுடன் 2 நாட்கள் நடந்த மாரத்தான் பேச்சுவார்த்தையின் போது அதற்கான சுப முடிவு ஏற்பட்டு எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை அடையாளம் கண்டறியும் பணியும் முடிந்து விட்டது. ஆனால் ம.தி.மு.க. விஷயம்தான் ஆரம்பத்தில் இருந்தே இழுபறியாக இருந்தது. காரணம், ம.தி.மு.க. 21 தொகுதிகளை கேட்டது. ஆனால் அ.தி.மு.க. மேலிடம் 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவு செய்தது. இதனால் மவுனம் சாதித்து வந்த வைகோவை நேற்று முன்தினம் அ.தி.மு.க முன்னணி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டத்தை வைகோ கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் சுமார் 9 மணி நேரம் நடந்தது. அப்போது சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று ம.தி.மு.க. தடாலடியாக முடிவெடுத்தது. இது தொடர்பாக வைகோ ஒரு நீண்ட அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ம.தி.மு.க. வின் இந்த முடிவு தமக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து வைகோவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், தங்கள் தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 2006-ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது. நடைபெற இருக்கின்ற 2011 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி 21 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்பதையும், தங்கள் கட்சிக்கு 12 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கித் தருகிறேன் என்பதையும் கழகப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி இருந்தேன். அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள்.

இருப்பினும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை புறக்கணிக்கும் என்று தாங்கள் அறிவித்து இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. தங்களுடைய முடிவு எப்படி இருந்தாலும், உங்களுடைய அன்புச் சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா உருக்கமாக கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்