முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக சங்கத்தில் இருந்து 5 பேரை நீக்கியது செல்லாது

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை 7 - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் இருந்து பெரீஸ் மகேந்திர வேல், எஸ்.பி. ஜெயபிரகாஷம், எஸ்.பி. அண்ணாமலை உள்ளிட்ட 5 பேரை நீக்கியது செல்லாது என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களாக சேர ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி தொழில் வர்த்தக சங்க நிர்வாக குழு எடுத்த முடிவை கண்டித்து பெரீஸ் மகேந்திரவேல், ஏ.ஆர். அற்புதம், எஸ்.பி. அண்ணாமலை, எஸ்.பி. ஜெயபிரகாஷம், ஆர்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். சங்க நிர்வாக குழு முடிவை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்ட காரணத்தால் மேற்கண்ட ஐந்து பேரையும் கடந்த 24.3.2009ம் தேதியன்று நடைபெற்ற சங்கத்தின் நிர்வாக குழுவில் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என்றும் நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும் உத்தரவிட கோரி பெரீஸ் மகேந்திர வேல் உள்ளிட்ட 5 பேரும் மதுரை முதன்மை சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெரீஸ் மகேந்திர வேல் உள்ளிட்ட 5 பேரையும் சங்கத்தில் இருந்து நீக்கியது செல்லாது என்று கடந்த 25.4.2012ம் தேதியன்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதன்மை சப் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் வர்த்தக சங்க தலைவர், செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் கடந்த 23.11.2012ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் மற்றும் செயலாளர் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி எஸ். விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொழில் வர்த்தக சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுப்பினர்களை சேர்க்கும் அதிகாரம் நிர்வாக குழுவிற்கு இருக்கும் போது உறுப்பினர்களை நீக்கவும் நிர்வாக குழுவிற்கு அதிகாரம் உண்டு என்று வாதிட்டார். பெரீஸ் மகேந்திர வேல் உள்ளிட்ட 5 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், உறுப்பினர்கள் தவறு செய்ததாக கூறும் போது அதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வர்த்தக சங்கத்திற்கு உள்ளது. வர்த்தக சங்க நிர்வாக குழுவிற்கு சங்கத்தை நிர்வாகம் செய்யவும் சங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும்தான் அதிகாரம் உள்ளது. சங்க உறுப்பினர்களை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,

பெரீஸ் மகேந்திரவேல், ஏ.ஆர். அற்புதம், எஸ்.பி. அண்ணாமலை, எஸ்.பி. ஜெயபிரகாசம், ஆர்.பி. பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேருக்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசில் விசாரணை நடக்கும் என்று கூறப்படவில்லை. விசாரணைக்கு முன்பு தவறு செய்திருப்பது தெரியவந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நோட்டீசை பார்க்கும் போது பெரீஸ் மகேந்திர வேல் உள்ளிட்ட 5 பேரையும் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தது போன்றே தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. ஆகவே, பெரீஸ் மகேந்திரவேல் உள்ளிட்ட 5 பேரையும் சங்கத்தில் இருந்து நீக்கியது செல்லாது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் மற்றும் செயலாளரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!