எல்லையில் அத்துமீறியதா சீனா? இந்திய ராணுவம் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

லடாக்,ஆக.20 - இந்திய எல்லையில் உள்ள லடாக்கில், சீன ராணுவம் 25 கி.மீ தொலைவிற்கு ஊடுருவியதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது.

லடாக்கில் சீன ராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியுள்ளதாகவும், இதனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்தினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இந்திய எல்லையின் லடாக் அருகே இந்திய ராணுவத்தினர் ரோந்து சென்றபோது, அங்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் முகாமிட்டிருந்ததை கண்டதாகவும். சீன படையினர் சுமார் 25 கி.மீ தொலைவுக்கு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை மீறியதாகவும் கூறப்பட்டது.

மேலும், இந்திய எல்லையில் ஒரு புதிய நிலையை ஏற்படுத்தி அங்கு 'இது சீனப் பகுதி, வெளியேறுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் சீன ராணுவத்தினர் அங்கு முகாமிட்டதாகவும் லே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிலிருந்து தகவல் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி தல்மீர் சிங் தெர்வித்துள்ளார். 'அது போன்ற எந்த சம்பவமும் எல்லையில் நடக்கவில்லை' என்று கூறி உள்ளார்.

இந்திய ராணுவ உயர் அதிகாரி எஸ்.டி.கோஸ்சுவாமி கூறும்போது, இந்திய மற்றும் சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பல்வேறு கோணங்களில் பார்க்கும்போது, எல்லைக் கட்டுபாட்டு பகுதி சற்று குழப்பம் ஏற்படுத்துவதாகவே இருக்கும். இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும்போது, வீரர்களுக்கிடையே, எல்லையை பிரித்துப் பார்ப்பதில் குழப்பம் ஏற்படும். இதனால் எல்லையை மீறும் சம்பவங்களும் நடக்கும். தற்போது, இந்திய எல்லைப் கட்டுப்பாட்டுப் பகுதியில், சீனா அத்துமீறவில்லை என்றார்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள லடாக் பகுதியில், கடந்த 2013- ஆம் ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி அவ்வப்போது நுழைந்து முகாமிட்டு வந்தது. இதனால் கடந்த ஆண்டு சீன- இந்திய எல்லையில் பெரும்பாலான நாட்களில் பதற்றமான சூழல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: