முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்ப்பாட்டம்: திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு அனுமதி

புதன்கிழமை, 12 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 13 - வேளாண் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த கோவை நகர திராவிடர் விடுதலைக்கழகத்துக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நகர திராவிடர் விடுதலைக் கழக தலைவர் இனியன் ம.நேருதாசு உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2014-ஆம் ஆண்டுக்கான வானிலை முன்னறிவிப்பு வழிகாட்டியை வெளியிட்டது. அதில், எந்த மாவட்டத்தில் எந்த நாளில் எப்போது மழை பெய்யும் என்பது தொடர்பான விவரங்கள் அடங்கியுள்ளன.

இது செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில் இருந்திருந்தால் அதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டடோம். ஆனால், அதன் தகவல்கள் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் பகுத்தறிவற்றது. அதனால், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். ஆனால், அனுமதி மறுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு செவ்வாய்க்கிழமை (நவ.11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட வானிலை முன்னறிவுப்பு வழிகாட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த மனுதாரர் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாங்கம் அறிப்பூர்வமானதா இல்லையா என்பதற்குள் போக விரும்பவில்லை. அது நீண்ட விவாதத்துக்குள்பட்டது.

வேளாண் பல்கலைக்கழகத்துக்கு முன்பு குறைவான இடம் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை செஞ்சிலுவை சங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இடம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்ட துணை ஆணையர் மனுதாரரின் மனுவை சட்ட விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்க வேண்டும். மனுதாரர் கழகம் அவர்களது கருத்தைத் தெரிவிக்க அடிப்படை உரிமை உள்ளது.

எனவே. மனுதாரர்கள் புதிதாக ஒரு மனுவை மூன்று நாள்களுக்குள் துணை ஆணையரிடம் வழங்க வேண்டும். அதைப் பெற்ற மூன்று நாள்களுக்குள் உரிய உத்தரவை துணை ஆணையர் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்