முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
Satyaprata-Saku

சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

காணொலி வாயிலாக... 

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

14 மேஜைகள்... 

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும். குறிப்பாக, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது.

முதல் கட்ட பயிற்சி... 

வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24 ஆயிரம் பேர், நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தபால் வாக்குகள்... 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும் போதே, தபால் வாக்குகள் எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும். அதேநேரம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே, இறுதி சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணி இறுதி முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து