முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 25 - இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசை மட்டும் ஈழத்தமிழர்கள் வெறுக்கவில்லை. தங்களை காப்பாற்றுவார்கள் என்று ஏங்கித்தவித்த தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான் அதிகமாக வெறுக்கிறார்கள். இனி மேல் பிறர்மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ளும் குள்ளநரி தந்திரம் கருணாநிதிக்கு எடுபடாது என்று விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கபட நாடகம் யார் ஆடினாலும் கண்டிக்கத்தக்கது. அதுவும் பாமர மக்களை திசை திருப்பும் வகையில் அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சான்றாக விடுதலைப் புலி இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
தமிழக முதலமைச்சராக இருந்த  கருணாநிதி  இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதலமைச்சர் பதவி பெரிது என்று கருதிய அவர், காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை. அந்த சிதம்பரம்  கருணாநிதியிடம் சொன்ன சிதம்பர இரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா?
போர் தொடர்ந்தபொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா?
அப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று(இன்று)  ஐ.நா. மன்றம் இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது. இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் அவர், ஏற்கனவே 1991இல் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும் என்று புலம்பியுள்ளார்.
ஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா?
ஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்தே ராஜபக்சேயை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்தே ராஜபக்சேயுடன் கை குலுக்க வைக்கிறார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா? இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில்.
தனது பிள்ளை மத்திய மந்திரி அழகிரி என்றால் எங்கே கைது செய்து விடுவார்களோ என்று முன் கூட்டியே அவர் பெயிலில் உள்ளார். இன்னொரு மத்திய மந்திரி ராஜா கேட்பாரின்றி திகார் ஜெயிலில் உள்ளார். கேட்டால் ஒவ்வொரு nullநீதிமன்றத்தில் ஒவ்வொரு வகையான தீர்ப்பு இல்லையா என்பார். கிடைக்கின்ற விவரங்களின் அடிப்படையில் வழங்கப்படுவது தீர்ப்பு. விவரங்கள் தவறாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கிறபொழுது தீர்ப்பு மாற்றத்திற்கு ஆளாகிறது. உண்மை கிடைக்கின்ற வரை மேல் முறையீடு செய்ய வேண்டிய கருணாநிதி அரசு, முன்னாள் தி.மு.க. எம்.பி., தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தால்தான் மேல் முறையீடு செய்யவில்லையா?
தேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார்? இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.
போரின் உச்சக்கட்டத்தில் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்?  தமிழ்நாடும், அதன் முதலமைச்சர் கருணாநிதியும் தங்களை காப்பாற்றுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காப்பாற்றாதது மட்டுமல்ல, தமிழினப் படுகொலைக்கும் கருணாநிதி  துணை போனார் என்ற துரோக வரலாறுதான் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த பாடமாகும். அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, தமிழனாகப் பிறந்து தமிழ் இனத்துக்கே துரோகம் செய்த தமிழ் இனத் துரோகி கருணாநிதியைத்தான்.
பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் குள்ளநரி தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி  முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும். உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் தூற்றுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago