முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013 டிசம்பருக்குள் பாராளுமன்ற தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 7 - 2014ம் ஆண்டு மே மாதத்தில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான 2 வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது என்றாலும் கூட, அதுவரை காத்திருக்க விரும்பாத காங்கிரஸ் கட்சி, 2013 டிசம்பரில் தேர்தலை நடத்தி முடித்து விட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் டெல்லியில் உலா வர ஆரம்பித்துள்ளது. முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்ததைப் போல இப்போதைய 2 வது அரசு இல்லை. முதல் அரசு அபாரமான பலத்துடனும், தெளிவான செயல்பாடுகளுடனும் கலக்கியது. ஆனால் 2 வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்தடுத்து பல்வேறு குழப்பங்களையும், சிக்கல்களையும், ஊழல்களையுமே கண்டு வருகிறது. நாளுக்கு நாள் அரசின் செல்வாக்கு மங்கிக் கொண்டே போகிறது. இதனால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற பேச்சு தொடர்ந்து அடிபட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமை உடனடித் தேர்தலை விரும்பவில்லை. இருப்பினும் முழு ஆட்சிக்காலம் முடிவடையும் வரை காத்திருக்கவும் அது விரும்பவில்லை. அது மேலும் மேலும் சிக்கல்களை அதிகரித்து விடும் என்று அது கருதுகிறது. எனவே முன்கூட்டியும் இல்லாமல், லேட்டாகவும் போகாமல், 2013 டிசம்பர் மாத வாக்கில் தேர்தலை நடத்தி விடலாமா என்ற யோசனையில் காங்கிரஸ் உள்ளதாம். காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பண வீக்கம், வேலை இல்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பற்றித்தான் அதிகம் பயப்படுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கள் எல்லா கட்சித் தலைவர்கள் மீதும் இருப்பதால், விலை வாசி உயர்வு பிரச்சினையே தங்கள் முன் உள்ள பெரிய சவாலாக காங்கிரசார் கருதுகிறார்கள். மேலும் பா.ஜ.க வுக்கு நல்ல வலுவான தலைவர் இல்லாததும், பிரதமர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்க முடியாமல் திணறி வருவதாலும் அதை தனக்குச் சாதகமாக காங்கிரஸ் கருதுகிறது. அடுத்த ஆண்டு மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி மாநில சட்டசபை தேர்தல்களும் காங்கிரசுக்கு கை கொடுக்காது என்று கூறப்படுகிறது. என்றாலும் மாநில சட்டசபைக்கு ஒருவிதமாகவும், பாராளுமன்றத்துக்கு ஒருவிதமாகவும் மாறுபட்ட நிலையை மக்கள் எடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆகவே காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் ஒரு குழுவை அமைத்து அவரது தலைமையில் லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராக தீர்மானித்துள்ளதாம். ஒருவேளை 2013 டிசம்பரில் தேர்தலை நடத்த முடியாமல் போனால், 2014 ஜனவரிக்குள் தேர்தலை நடத்தி விட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்