முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.1 - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சிகரெட்களுக்கு 18 சதவீத உற்பத்தி வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செட்டாப் பாக்ஸ்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆடம்பர வாகன இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலையும் உயரும். இதனால் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். 

பாராளுமன்றத்தில் நேற்று 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இதுவரை ப.சிதம்பரம் 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால் காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் இது. எனவே வரிசலுகைகள் இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். வருமான வரிவிலக்கு உச்சவரம்பிலும் மாற்றம் இருக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. மாறாக புதிய வரிகள்தான் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றே சொல்லலாம். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விபரங்களை இங்கு பார்ப்போம். 

நேரடி மானிய திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஆலைகளில் சுற்றச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதமாக இருக்கும். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் மாத சம்பளம் வாங்குபவர்களும் நடுத்தர மக்களும் ஏமாந்து போனார்கள். ரூ.கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான கூடுதல் வரிவிதிப்பும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை 15 சதவீதமாக இருக்கும். வரிக்கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம் அமைக்கப்படும். குழந்தைகளுக்கான தேசிய நலநிதி உருவாக்கப்படும். ரூ.50 லட்சத்திற்கு மேல் அசையா சொத்து விற்பனையில் ஒரு சதவீத வரிப்பிடித்தம் செய்யப்படும். விவசாய நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்படும். வரிஏய்ப்பு தடுப்பு சட்டம் 2014 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும். விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் செட்டாப் பாக்ஸ்களுக்கு வரி உயர்வு. இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்ளுக்கு (கார்கள்) சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

சிகரெட்டுக்கு வரி

சிகரெட்டுகளுக்கு 18 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு 6 சதவீத வரி வதிக்கப்படும். ரூ.2000 ஆயிரத்திற்கு கீழே விலை இருந்தால் மாற்றம் இல்லை. திரைப்பட துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கப்பல் கட்டும் தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்யுவி வகை கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது மறைமுக வரிமூலம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும். நேரடி வரி மூலம் ரூ.13,300 கோடி வரி கிடைக்கும். வெள்ளி உற்பத்திக்கு 4 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பாளர்களுக்கு ஒரு முறை மன்னிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கென்று தனியாக அனைத்து மகளிர் வங்கி துவங்கப்பட உள்ளது. இந்த வங்கிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் துவக்கப்படும். இதற்காக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன ஓட்டல்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் மதிய உணவு திட்டத்திற்கு 13 ஆயிரத்து 215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை போல் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு அதாவது ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 294 நகரங்களில் எப்எம்.வசதி செய்யப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் எல்.ஐ.சி. அலுவலகம் அமைக்கப்படும். தூத்துக்குடி துறைமுக விரிவாகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு ரூ.65 ஆயிரத்து 867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காற்றாலை திட்டத்தை ஊக்குவிக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சித்தாவுக்கு ரூ.ஆயிரத்து 69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை உள்ள ஆண்டு வருமானத்திற்கு வரிகழிவு செய்யப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு. மேற்குவங்கம் ஆந்திராவில் இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்படும். தேசிய கால்நடை திட்டம் துவக்கப்படும். விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 250 மில்லியன் உணவு தானிய உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்