முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: மீனவர்கள் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம்,ஏப்.3 - வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின்னர் 16நாட்கள் கழித்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து வலைகளை அறுத்து கடலில் வீசிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைநிறுத்தபோராட்டம் முடிந்து 16நாட்களுக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 633 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தனுஷ்கோடி கடல்பகுதி வரை விரட்டிவந்தனர். இதன்பின்னர் படகில் இருந்த வலைகளையும், கயிறுகளையும் அறுத்து கடலில் வீசினர். இதனால் ஒவ்வொரு படகிற்கும் பலஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த மீனவர் நாகராஜ் கூறியதாவது:- எங்களின் விசைப்படகு உரிமையாளர்கள் 16நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்லும்போது வட்டிக்கு கடன் வாங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையின் தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களால் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், ராமேசுவரத்தில் உள்ள மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையுடன் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்