முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி -5 ஏவுகணை: 2வது சோதனை வெற்றி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

பாலசூர், செப். 17 - அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட அக்னி - 5 ஏவுகணை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்க கூடிய திறன் படைத்தது இந்த ஏவுகணை. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப திறனுக்கும் நாட்டின் வலிமைக்கும் அடையாளமாக திகழும் இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். 

டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்துள்ள இந்த ஏவுகணையானது, கடந்த ஆண்டு ஏப்ரலில் முதலில் சோதனை செய்யப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டுள்து. சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பாய்ந்து சென்று ஏவுகணை திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறினர். இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல கூடியது. மூன்றடுக்குகளை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் மோட்டார்கள் மூலம் இயங்க கூடியது. எவ்வித தவறும் இல்லாமல் ஏவப்பட்ட ஏவுகணையானது திட்டமிட்ட பாதையில் பாய்ந்தது. மூன்று மோட்டார்களும் திட்டமிட்டபடி எரிந்து முடிந்து கடலில் விழுந்தன. ஏவுகணை பறக்கும் பாதையில் நடுக்கடலில் கப்பலிலும், நிலத்திலும் உள்ள நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த ராடார்கள் மூலம் கண்காணித்ததில் கிடைத்த தரவுகளின்படி ஏவுகணையின் செயல்பாடு சரியாக இருந்தது. 

மேலும் ஏவுகணையின் இயந்திரங்களும், அதன் துணை பாகங்களான ஏவும் அமைப்பு, வழிகாட்டும் அமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு, ராக்கெட் மோட்டார் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக செயல்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பாராட்டினர். 

அக்னி - 5 சோதனையின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலர் அவினாஷ் சந்தர், திட்ட இயக்குனர் பி.கே.குப்தா மற்றும் வியூகப்படை பிரிவினர் உடன் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்