உடல் பருமனை குறைக்கும் மருத்துவம்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016      மருத்துவ பூமி
body-1

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில், கொள்ளு, இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். உடல் பருமனால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடல் உழைப்பு இல்லாதது போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படும்.

இது, சங்கடமான நிலையை ஏற்படுத்தும். உள் உறுப்புகள் விரைவில் சோர்ந்து போகும். எனவே, உடல் பருமனை தடுப்பது அவசியம். உடல் வியர்க்கும்படி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் கஞ்சி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கொள்ளு, புழுங்கல் அரிசி, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகுப்பொடி. கொள்ளுவை லேசாக வறுத்து பொடி செய்ய வேண்டும். புழுங்கல் அரிசியை உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் புழுங்கல் அரிசி சம அளவு கொள்ளுப்பொடி எடுக்கவும்.

இதனுடன் உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு தட்டிபோடவும். நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு. ஊட்டச்சத்து மிக்கது. கொள்ளு, கொடம்புளி ஆகியவை தலா 15 கிராம் எடுத்து கொதிக்க வைத்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும். கொள்ளுவை பயன்படுத்தி சூரணம் தயாரிக்கலாம். கொள்ளுபொடி, சீரகப் பொடி, சுக்குப் பொடி, நன்னாரி பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சூரணமாக சாப்பிடலாம் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

இதனால் உடல் எடை குறையும். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்களுக்கு அதிக எடை கூடும். கொள்ளு மாதவிலக்கை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. நன்னாரி உஷ்ணத்தை ஏற்படுத்தி கொழுப்பை கரைக்கும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. காய்கறிகளை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு தட்டிப்போடவும். ஒரு ஸ்பூன் முள்ளங்கி பசை, ஒரு ஸ்பூன் கத்திரிக்காய் பசை, மிளகுப்பொடி, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கும்போது உடல் நன்றாக வியர்க்கும்.

கொழுப்புகள் கரையும்: தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். கத்திரிக்காய் அற்புதமான உணவாக விளங்குகிறது. இதில் கந்தக சத்து, விட்டமின் சி உள்ளிட்டவை உள்ளது. முள்ளங்கி பல்வேறு சத்துக்களை கொண்டது. உடலில் படிந்திருக்கும் கொழுப்பை குறைக்கிறது. தக்காளியை பயன்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தக்காளியில்  சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இது, அற்புதமான மருந்தாகிறது. தக்காளியின் மேல்தோலை மட்டும் எடுத்து சுருக்கம் உள்ள இடத்தில் போட்டுவைப்பதாலோ, கூழாக்கி பூசுவதாலோ முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: