கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெற நவீன உத்திகள்

புதன்கிழமை, 14 டிசம்பர் 2016      வேளாண் பூமி
peanut-1

கார்த்திகைப் பட்ட  நிலக்கடலை  சாகுபடி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில் நுட்ப முறைகளை பற்றி நம்பியூர், வேளாண் உதவி இயக்குநர் ஆசைத்தம்பி  தெரிவித்துள்ளதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஒரு முக்கியமான பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  நிலக்கடலை எண்ணெய் உற்பத்தியில் 94 சதவீதம் உணவிற்காகவும்,  4 சதவீதம் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்தியா முதலிடம்: இதில் 54 சதவீதம்  எண்ணெய் சத்து உள்ளது.  நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கடலைப் பருப்பில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. மேலும், இது ஒரு சிறந்த தீவனப் பயிராகப் பயன்படுகிறது. நிலக்கடலை பருப்பிலிருந்து எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கில் 51.75 சதவீதம் புரோட்டினும், 0.22 சதவீதம் கொழுப்பும், 26.94 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் 5.7 சதவீதம் தாதும் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு ஊட்ட உணவாக இதைப்  பயன்படுத்தலாம். இதில் 7 சதவீதம்  தழைச்சத்தும் உள்ளதால் ஊட்டமிகு இயற்கை எருவாகவும் பயன்படுகிறது.

இரண்டு மடங்கு மகசூல்: இப்படிப்பட்ட  பெருமைகள்  அடங்கிய  நிலக்கடலை சராசரியாக இறவையில்  ஏக்கருக்கு 2 டன்களும் மானாவாரியில் ஒரு டன்னும் மகசூல் கொடுத்து வருகிறது சில முதன்மையான நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த மகசூலை இரண்டு மடங்காக்க இயலும். 

பருவம் மற்றும் மண் வகை: இறவை நிலக்கடலையைப் பொருத்தவரை ஏப்ரல், மே (சித்திரைப்பட்டம்) ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) டிசம்பர், ஜனவரி (கார்த்திகைப் பட்டம்) ஆகிய மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏற்றது. பொதுவாக கார்த்திகைப் பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்திற்குள் விதைப்புச் செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.

மண்: மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலைக்கு  ஏற்றதாகும்.

உழவு: சட்டிக் கலப்பை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக்  கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை (புழுதி ஆகும் வரை) உழ வேண்டும்.

ரகங்கள்: டி.எம்.வி-7, டி.எம்.வி-13, கோ- 3, கோ-4, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-3, வி.ஆர்.ஐ -5 , வி.ஆர்.ஐ -6 ,  ஏ.எல்.ஆர்-3 ஆகியவை ஏற்ற இரகங்களாகும்.

விதை நேர்த்தி: விதைகளை திரம் அல்லது மாங்கோசெப் மருந்து - 4 கிராம் - கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம்-2 கிராம்ஃகிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும். இதை விதைப்புக்கு ஒரு நாள்முன்பு, செய்ய வேண்டும். இரசாயன மருந்துக்குப் பதிலாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம்  டிரைகோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் என்ற நன்மை செய்யும் உயிரியல் மருந்துகளைக்  கலந்தும் விதைக்கலாம்.  மேலும், டிரைகோடெர்மா விரிடி… உயிரியல் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ  என்ற அளவில் விதைப்பின் போது சிறிது தொழு உரத்துடன் கலந்து இடலாம். இதன் மூலம் தண்டு அழுகல், கழுத்தழுகல்,வேரழுகல் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.  நிலக்கடலைப் பயிரில் போதுமான பயிர் எண்ணிக்கை இல்லாதது மகசூல் குறைவுக்கு முக்கியமான காரணமாதலால், விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.

ரைசோபியம் விதை நேர்த்தி: ரைசோபியம் உயிர் உரம்-400 கிராம் (2-பாக்கெட்) என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு உண்டான விதையுடன் அரிசிக் கஞ்சி சேர்த்துக் கலந்து நிழலில் காயவைத்து விதைக்க வேண்டும். மேலும், விதைப்பின் போது ரைசோபியம் 4 பாக்கெட், பாஸ்போ பேக்டர் - 4, பாக்கெட் சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.

இடைவெளி: 30 ஒ 10 செ.மீ இடைவெளியிலும், 4 செ.மீ ஆழத்திலும் விதைக்க வேண்டும்.  ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு சைக்கிள் டயர் அளவுக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை: இறவைப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 7:14:21 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய 15 கிலோ யூரியா, 88 கிலோ சூப்பர் பாஸ்பேட் 35 கிலோ பொட்டாஷ் உரங்களை முழுவதும் அடியுரமாகவே இடவேண்டும். அல்லது டி.ஏ.பி 40 கிலோவுடன் பொட்டாஷ் 35 கிலோ – சேர்த்து  அடியுரமாக இடலாம். நிலக்கடலைக்கு அனைத்து உரங்களையும் விதைப்பின் போது அடியுரமாகவே இடவேண்டும் என்பது முக்கியமானதாகும்.

நுண்ணூட்டமிடுதல் : நிலக்கடலை நுண்ணூட்டம் 5 கிலோ-வை 40 கிலோ மணலுடன் கலந்து, விதை விதைத்தவுடன் மேலாகத் தூவ வேண்டும். பயிர் வெளுப்பு, மற்றும் மஞ்சள் நிறமாகி வளர்ச்சி குன்றுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

களைக்கொல்லி: விதை விதைத்து 3 - வது நாளில், வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போது ஏக்கருக்கு 800 மில்லி ’புளுகுளோரலின்” – என்ற களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்காத பட்சத்தில் விதைத்த 20 - 25 ம் நாளில் களை முளைத்தபின் தெளிப்பதற்கு  ‘இமாசிதாபைர்” என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

ஊட்டச் சத்து குறைபாடு: துத்தநாக குறைபாடுள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள நுண்ணுட்டக் கலவைகளையும் பயன்படுத்தலாம்.

ஜிப்சம் இடுதல்: நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம்.  இதில் 23 சதம் - சுண்ணாம்பு சத்தும், 18 சதம் - கந்தக சத்தும் அடங்கியுள்ளது.  இதில் சுண்ணாம்பு சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடன் காய் உருவாகவும் வழி செய்கிறது.

கந்தகச் சத்தானது நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 80-கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைக்கும்போது இடவேண்டும், பின்னர் 40-45-ம் நாளில் களை வெட்டும் போது மீண்டும் ஒரு முறை 80-கிலோ ஜிப்சத்தை இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும்.

பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், அதிக காய்கள் பிடிக்கவும் ஏதுவாக’பிளேனோபிக்ஸ்” - என்னும் பயிர் ஊக்கியை ஏக்கருக்கு 140 மில்லி என்ற அளவில் விதைத்த 25 - ம் நாளிலும் 35 - ம் நாளிலும்  இரண்டு முறை தெளிக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: சுருள் பூச்சி மற்றும் சிகப்பு கம்பளிப்புழுவை கட்டுபடுத்த துவரை, தட்டை (அ) உளுந்து பயிர்களை ஊடுபயிர் செய்வதால் அவற்றில் இடப்படும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழித்து விடலாம்.
பொருளாதாரச் சேதநிலையை அறிந்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.  இப்படிப் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெறலாம்.

இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: