Idhayam Matrimony

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      தமிழகம்
CM 2024-12-20

மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல் விழாவாக...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த  3 நாட்களுக்கு முன் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து அரசியல் விழாவாக நடந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மனதார பாராட்டு...

முன்னதாக முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- நம்முடைய நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில் இன்றைக்கு (நேற்று) எங்களுடைய மரியாதையை செலுத்தியிருக்கிறோம். பசும்பொன் திருமகனாரின் புகழைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமையோடு எடுத்துச்சொன்னதை நான் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், பசும்பொன் திருமகனாரை மனதார பாராட்டி இருக்கிறார்.

மணிமண்டபமாக... 

1963-ம் ஆண்டு பசும்பொன் திருமகனார் நிறைவெய்தியபோது, பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் அன்று கழகத்தில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரும், இந்தப் பசும்பொன்னுக்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு (நேற்று) ஏராளமான அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வந்து, பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்றும் இந்த நினைவிடத்தை, 1969-ல் பார்வையிட்டு, 1974-ல் மணிமண்டபமாக உருவாக்கிக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இதையும் கட்டியிருக்கிறார்.

கலைஞரின் முன்னெடுப்புகள்...

அதேபோல், பி.கே.மூக்கையாத்தேவரின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மதுரையில் கம்பீரமாக நிற்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியை அழைத்துக் கொண்டு வந்து, அந்த விழாவிற்குத் தலைமை வகித்தவரும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்தான். பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்றக்கூடிய, புகழைச் சொல்லக்கூடிய வகையில், கலைஞர் கருணாநிதி செய்த முன்னெடுப்புகளைத் தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மட்டும் நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

மாபெரும் அரசு விழா....

மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயர் சூட்டினார்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் 25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளை உருவாக்கினார்.  2007-ஆம் ஆண்டு பசும்பொன் திருமகனார் நூற்றாண்டு விழாவை, மாபெரும் அரசு விழாவாக கொண்டாடினார். பசும்பொன் திருமகனார் நினைவகத்தில் அணையா விளக்கு அமைத்தது, தேவர் இல்லத்தை 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தது, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புகைப்படக் கண்காட்சி,  4 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முடி இறக்கும் இடம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பால்குட மண்டபம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முளைப்பாரி மண்டபம்  நினைவகத்தை சுற்றியிருக்கின்ற சாலையை கல் சாலையாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்படி நிறைய செய்து பெருமைப்படுத்தியிருக்கிறார்.

அனுமதி வழங்கியவர்...

அதுமட்டுமல்ல, பசும்பொன் திருமகனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்திற்கு மட்டும், மொத்தமாக 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு. 1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி, கல்வி - வேலைவாய்ப்பில் இந்தச் சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரும் கலைஞர்தான். கழக ஆட்சி முதன்முதலாக உருவானபோது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்களுடைய மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் அனுமதி வழங்கியவர் கலைஞர்.

மீட்டிருக்கின்றோம்... 

அதிலும் குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிட்டார்கள். முன்னாள் பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் ‘தேவர் கல்விச் சங்கம்’ உருவாக்கப்பட்டது. அதன் சார்பில், மேலநீலிதநல்லூரில், அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதோடு, 44.94 ஏக்கர் நிலத்தையும் கலைஞர் வழங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட அந்தக் கல்வி நிறுவனம், என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அதைச் சீர்குலைக்கின்ற வகையில் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வட்டாரத்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது, “ஆட்சி அமைந்ததும் தீர்வு காண்போம்” என்று நான் சொன்னேன். 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும், அதை மீட்டிருக்கின்றோம். இப்போது, அரசு மேற்பார்வையில் அந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

திருமண மண்டபம்...

இன்னும் சிறப்பாக நடத்த நிர்வாக ரீதியாக எல்லா உதவிகளையும் நமது திராவிட மாடல் அரசு நிச்சயமாக உதவி செய்யும் என்று அந்த நல்ல செய்தியையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வெயில் மற்றும் மழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், பசும்பொன் திருமகனார் நினைவிடத்தில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை கடந்த ஆண்டு நான்தான் திறந்து வைத்தேன். புதிதாக பசும்பொன்னில் ஒரு திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அவை பின்வருமாறு;-

கேள்வி: கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் நிருவாகக் குழு அமைப்பது குறித்து…

முதல்வர்  பதில்: நடவடிக்கையில் இருக்கிறது. விரைவில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

கேள்வி: தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது தொடர்பாக…

முதல்வர்  பதில்: அதை நாங்கள் வழிமொழிய காத்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: காவேரி – வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து…

முதல்வர்  பதில்: முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக…

முதல்வர்  பதில்: இது உங்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நாடு முழுவதும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பரிசீலனையில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து