முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.808 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலைகளை புனரமைக்கும் பணி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      விழுப்புரம்

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினால் ஏற்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மழைநீரை சேமித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்த, நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனை குடிமராமத்து திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் முதல் கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய "குடிமராமத்து" திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிமராமத்து என்பது பாசன அமைப்பு விவசாயிகள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகால்சோழனால் கட்டப்பட்டு குடிமராமத்து மூலம் பராமரிக்கப்படும் கல்லணை இத்திட்டத்திற்கு முன்னோடியாகும்.குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 101 ஏரிகளில், ரூ.808 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு பொறியாளர்களின் கண்காணிப்பில் பொதுமக்களால் செயல்படுத்தப்படும்.மொத்த மதிப்பீட்டில் 10 சதவீத மதிப்பீட்டுத் தொகை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ அல்லது பணப்பங்களிப்பாகவோ பெறப்பட்டு பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும், விவசாய பாசன சங்கங்களும் அதிக அளவில் பங்கு பெற்று மாவட்டத்திலுள்ள நீர் ஆதாரங்களை செம்மை படுத்தவும், அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும் முன் வரவேண்டும் எனவும் கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்