ஊட்டியில் 15-வது ரோஜா கண்காட்சி துவங்கியது ரோஜா மலர்களினாலான வடிவங்களை பார்த்து சுற்றுலாப் பயணிகள் பரவசம்

சனிக்கிழமை, 13 மே 2017      நீலகிரி
13ooty-2

ஊட்டியில் நேற்று துவங்கிய 15_வது ரோஜா கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களினால் ஆன அலங்கார வடிவங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பார்த்து ரசித்தனர்.

                            செல்பி ஸ்பாட்

கோடை விழாவினையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக ஊட்டி ரோஜா பூங்காவில் 15_வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கண்காட்சியில் நீலகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 31 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களைக்கொண்டு 10 அடி உயரம், 15 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்பாட், கோவை, திருப்பூர், திண்டுக்கல் கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் சார்பில் தமிழர்களின் கலாச்சார நடனமாம் பரதநாட்டிய முத்திரைகளை காட்சிப்படுத்தும் 7 நாட்டிய பெண் உருவ அமைப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அல்போன்சா மாம்பழ உருவமைப்பு, சேலம் மாவட்டம் சார்பில் ரோஜாக்களினாலான ராக்கெட்,  மதுரை மாவட்டம் சார்பில் புறா உருவ அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வெவ்வேறு விதமான வடிவங்களை வைக்குமாறு தோட்டக்கலைத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

                             கலைநிகழ்ச்சிகள்

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, ஆவின் இணைய தலைவர் அ.மில்லர், முன்னாள் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன்,  மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன், கோட்டாட்சியர் கீதாபிரியா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மணி, துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய், அ.தி.மு.க.,அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார், பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் ரோஜா சங்க மாவட்ட தலைமை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியையொட்டி பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: