முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் – பழமொழி. முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் –புதுமொழி.

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      மாணவர் பூமி
try

Source: provided

முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான்.  தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான்.  தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது. ‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.

முயற்சியில் வெற்றி கிடைக்க மூன்று விஷயங்களில் நாம் சரியாக இருக்க வேண்டும். 1. நம்முடைய நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும். 2. நம் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். 3. எல்லோரும் முயலும் பொதுவான வழியாக நம் வழியும் இல்லாமல், சற்று அறிவு நலனும் கெட்டிக்காரத்தனமும் கொண்டதாக நம் வழி இருக்க வேண்டும்.

தொடக்க நிலை இடையூறுகள் என்பது எந்தத் துறையில் புதிய முயற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கும் இயற்கையாக ஏற்படுகிற ஒன்று. ஒரே தாவலில் முதல் படியிலிருந்து பத்தாவது படியை தாண்ட முடியுமா? ஓவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். சாதாரண தரையில் நடக்கும் போதே கால் இடறுவதும் எங்காவது கல்லில் கால் விரல் இடித்துக் கொள்வதும் சகஜம். படியேறும் போது கால் வலியும், மூச்சு இறைப்பும் ஏற்படுத்துவதும் சகஜம். இதே போல் புதிய துறையில் ஈடுபடும் போது ஏற்படும் இடையூறுகள், சிக்கல்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதைப் புரிந்து கொள்ளாமல் தொடக்க நிலை இடையூறுகளைக் கண்டே பின்வாங்கி விடக்கூடாது.  பிரச்சினைகளை நாம் தான் வெல்ல வேண்டுமே தவிர நம்மை பிரச்சினை வென்று விடக்கூடாது.  மனிதர்கள் இரண்டு கால்களாலும் நடக்கிறார்கள். இதை இயற்கை ஒரே நாளில் அளித்துவிட்டதா? குழந்தை குப்புறக் கவிழ்ந்து, பின் தவழ்ந்து, கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்து, நாளடைவில் எழுந்து நின்று, சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கப் பழகி, பின்னரே தன் சொந்தக் கால்களால் நிற்கிறது; நடக்கிறது; ஓடுகிறது.   இதுபோலவே தான், ஒவ்வொருவரும் தனது லட்சியப் பயணத்தில் அடி எடுத்து வைக்கும்போது ஒவ்வொரு அடியாகத்தான் முன்னோக்கி நடக்க வேண்டும். அடுத்த அடி எடுத்து வைக்கும் அவசரத்தில், சறுக்கி விழுந்து, கீழ்ப்படிக்கே மீண்டும் போய்விடக்கூடாது.

இன்னும் சிலர் உண்டு. எந்த ஒரு புதிய துறையில் இறங்குவது சம்பந்தமாக யோசனை கேட்டாலும், “அது சரி வராது” என்று கூறி, நமது தன்னம்பிக்கையைக் குலைத்து விடுவார்கள். உண்மையில் அவர்களுக்கு, அந்தத் துறையைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றால், எதுவும் தெரியாது. வாத்தியார் வேலை பார்க்கிறவரிடம் வேறு எந்தத் தொழிலையும் பற்றி ஏதாவது அனுபவம் இருக்குமா? இருக்காது. ஆனால் அவரிடம் மளிகைக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்; என் யோசனைசரிதானா? என்று கேட்டுப் பாருங்கள்; “அதெல்லாம் சரி வராது; கடைத் தெருவில் ஏற்கனவே ஏழெட்டு மளிகைக்கடை இருக்கிறது. அதுவே காத்தடிக்கிறது. வியாபாரமே இல்லை. மேலும் கடைத் தெருவில் வாடகைக்கு கடை பிடிக்க வேண்டுமானால் ஐந்து லட்சம் பகடி கேட்பான். அப்புறம் இடத்துக்கு அட்வான்ஸ், கடை வாடகை, கரண்ட் சார்ஜ், அப்புறம் மளிகை சரக்கு வாங்கப் பணம்; வேலைக்கு ஆட்கள் வைக்க வேண்டும்; அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் இப்படியெல்லாம் முதல் போட வேண்டும். போட்ட முதலை எடுக்கவே ஐந்து வருடம் ஆகிவிடும். இப்படித்தான் கணேஷ் ஸ்டோர் மளிகைக்கடையில் வேலை பார்த்த பையன், தனியாகப் போய் சின்ன கடைத் தெருவில் கடை போட்டான். செம ‘லாஸ்’ பிறகு கடையை மூடிவிட்டு, கோயமுத்தூரில் முட்டைக்கடை வைத்திருக்கிறானாம்” என்று ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடத்தி விடுவார்.

ஜவுளிக்கடை வைத்து நன்றாக சம்பாதிக்கும் ஒருவரை அணுகி நானும் ஜவுளிக்கடை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்று யோசனை கேட்டுப் பாருங்கள். தன் தொழிலுக்கு போட்டியாக வேறொருவர் வருவதை எந்த ஒரு வணிகரும் விரும்பமாட்டார். இது மனித இயல்பு. அதன்படியே இவரும், “எனய்யா நான் மாட்டிக்கொண்டு தவிப்பது போதாதா? இதுவரைக்கும் பத்து லட்ச ரூபாயை இந்த தொழிலில் நஷ்டமடைந்து விட்டேன். வெளியிலே வரவேண்டிய பாக்கியே நான்கு லட்ச ரூபாய்க்கு நிற்கிறது. போன மாசம், கடை சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் என் பொண்டாட்டி நகையை அடகு வைத்து சம்பளம் கொடுத்தேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்” என்பார்.   உண்மையில் அவர் தனது ஜவுளிக்கடை தொழில் மூலம்  ஒகோ என்று சம்பாதிக்காவிட்டாலும், ஏதோ லாபகரமாகத்தான் தொழில் நடத்திக் கொண்டிருப்பார். கடை தொடங்கும் போது பத்தாயிரம் ரூபாய் சரக்கு இருந்த அவரது கடையில் இப்போது ஐந்து லட்ச ரூபாய்க்கு சரக்கு இருக்கும். பேங்கில் பணம் மனைவிக்கு நகை என்றும் சம்பாதித்து வைத்திருப்பார். ஆனால் ‘பஞ்சப்பாட்டு’ பாடி தன் தொழிலுக்கு வருகிறவரை வர விடாமல் செய்துவிடுவார்.

அத்தோடு போயிற்றா? பட்டுக்கோட்டைக்கு வழி என்னடா என்று கேட்டால் கொட்டைப் பாக்கு காசுக்கு ரெண்டு என்று சொன்ன கதையாக ஆகாத ஊருக்கு போகாத வழி காட்டுவார்.  “எவர்சில்வர் பாத்திரக்கடையை எனக்குத் தெரிந்து ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பாத்திரக்கடை வைத்தான் குருசாமி. இன்று மூன்று மாடி வீடு கட்டிவிட்டான். கார் வாங்கி விட்டான். பெரிய பையனை அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்கு அனுப்பப் போகிறானாம். செஞ்சா அதுமாதிரி தொழில் செய்யனும். சும்மா ஜவுளிக்கடையில் பனியன் ஜட்டி விற்று என்னத்தை லாபம் பார்க்கிறது. கடை வாடகை கொடுக்கவே வருமானம் போதாது” என்று கூறி தன்னிடம் ஜவுளித் தொழிலுக்கு யோசனை கேட்டவனுக்கு எவர்சில்வர் தொழிலுக்கு வழி சொல்லுவார்.

 கேட்பவன் மன உறுதி இல்லாதவனாகவோ, அல்லது தனக்கு யோசனை சொல்லும் நபர் நல்லவர் என்று நம்புகிறவனாகவோ இருந்தால், அவர் சொல்படியே எவர்சில்வர் பாத்திரத் தொழில் செய்யும் யோசனைக்கு மாறி விடுவான். எனவே, உங்களுக்கு அனுபவம் உள்ள தொழிலோ, ஆர்வம் உள்ள தொழிலோ இரண்டில் ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் தான் உங்கள் மனம் ஒன்றும் அதில் தங்கு தடைகள் ஏற்பட்டாலும் மனம் சலித்துக்கொள்ளாது. தொடர்ந்து முயன்று வெற்றிகாணும்.  எனவே ஆர்வமற்ற துறையில், வெறும் ஆசையை மட்டும் அடித்தளமாகக் கொண்டு முயன்று, தோல்வி கண்டுவிட்டால், பிறகு உங்கள் மனம் புதிய முயற்சி எதிலும் இறங்கவே பயப்படும். புதிய மனிதர்களைக் கண்டாலும், இவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று அச்சம் கொள்ளும்.  ஆனால் ஆர்;வமுள்ள துறையில் ஈடுபடும்போது, மனம் தோல்வி கண்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்;; முந்தைய தோல்விகளால் பாடம் கற்றுக் கொண்டு புதிய முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும்.  நாம் ஓரிடத்திற்குப் போக விரும்பி நடந்தோ, வாகனத்திலோ போகிறோம். குறுக்குப்பாதை என்று நினைத்து ஏதோ ஒரு தெரு வழியாகப் போகிறோம். ஆனால் உண்மையில் அது நாம் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் வேறு இடத்திற்குப் போகும் பாதை, உடனே என்ன செய்கிறோம்? வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறோமா? அல்ல. திரும்பி வந்து சரியான பாதையைக் கண்டறிந்து அதில் பயணிக்கிறோம்.  காரணம், நாம் போய்ச் சேர வேண்டிய இடம் எது என்ற இலக்கு முடிவாகிவிட்டது. போகும் பாதை தான் நமக்குத் தேவை. அதுபோல் வெற்றியாளர்களுக்கு வெற்றி இலக்கு என்ன என்பதை அவரவர் உள்மனம் உணர்த்தி விடும். அதைச் சென்றடைய முதலில் சென்ற முயற்சி பாதை தவறாக இருந்தாலும் அவர்கள் சோர்ந்து விடுவதில்லை. முயற்சியைக் கைவிட்டு திரும்பிய இடத்துக்கே வந்து விடுவதில்லை. பாதையை மாற்றிக் கொள்வது போல் முயற்சியை மாற்றிக் கொண்டு தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வார்களே தவிர, சோர்ந்து விடுவதில்லை.

தனது அதீதமான அறிவுக் கூர்மையாலும், கெட்டிக்காரத்தனத்தாலும் இவர் தங்கள் பாதையிலிருந்து தடம் புரண்டு விடக்கூடும். ஒழுக்கக் குறைவு, தவறான நோக்கம், கெட்டவர் சேர்க்கை போன்றவற்றால் வழி தவறிப்போய் வாழ்க்கையில் படுதோல்விப் பள்ளத்திற்குள் விழுந்து விடுவர். இப்படி பலர் பரிதாபப் பள்ளத்தாக்கில் விழுந்து அழிந்ததையும் நாம் படித்துமிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம்.   எனவே, அடிப்படையில் ஆரோக்கிய மனம் உள்ளவர்களை, கெட்ட சகவாசம் கிட்டே அணுகாது. அணுகி, முயற்சித்து, இவர்களின் பணத்தால் தாங்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆதாயம் அடையாளம் என்று கணக்கிட்டுக் கொண்டு வருபவர்கள் கூட, இவர்களது ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கண்டு இவர்களால் தங்களுக்குப் பயன் ஏற்படாது என்று விலகிச் சென்று விடுவர்.  எனவே, எதற்கும் விட்டுக் கொடுக்காத பண்பு நலன் தான் நம் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக விளங்குகிறது.  ‘இது என்னால் முடியாது; அதற்கான சாமர்த்தியம் எனக்குப் போதாது’ என்று எண்ணாதீர்கள்; சொல்லாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு குறைவான சாமர்த்தியம் இருந்த போதிலும், அந்த முறையான அளவிற்கான சாமர்த்தியத்திற்கு உரிய வெற்றியை அடையவாவது உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்பது உண்மையல்லவா?

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து