முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் அகதிகளை ஏற்க மறுப்பு: மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, மியான்மர் அகதிகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நாட்களாக நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக ராணுவத்தினரும், சில தீவிரவாத சக்திகளும் இணைந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மிக கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்திற்கு அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் அகதிகள் இருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்த வரை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அகதிகள் நலனில் மனிதாபிமானத்தோடு நடத்துவதில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறோம். கடந்த காலங்களில் திபெத்திலிருந்து தலாய்லாமா எல்லை தாண்டி நமது நாட்டிற்கு வந்தபோது அடைக்கலம் வழங்கிய பெருமை இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கு உண்டு. அதேபோல, இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் மற்றும் பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் இந்தியா வழங்கியிருக்கிறது.

ஆனால் தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற காரணத்தை கூறி ரோஹிங்கியா முஸ்லீம் மக்களை மியான்மருக்கே திரும்ப அனுப்புவதில் பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மனிதாபிமானமற்ற செயலாக கருத வேண்டியிருக்கிறது. அகதிகளாக வருபவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். அவர்கள் குடியுரிமை கேட்கவில்லை. மனம் திறந்து பேசுகிறேன் என்று வானொலியில் ஊருக்கு உபதேசம் செய்கிற நரேந்திர மோடி, அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு கருணை காட்ட மறுப்பது ஏன்? 1971-ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசால் கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இந்த அநீதியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் அகதிகளாக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மேற்கு வங்காளத்திற்கு எல்லை தாண்டி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்க வைத்து, உணவளித்து, பாதுகாத்து அவர்களுக்கு துணையாக இருந்தார். இன்றைய பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுபான்மை மக்களை மத, இன ரீதியாக அடையாளப்படுத்தாமல் மனிதாபிமான உணர்வோடு அகதிகளாக கருதி தற்காலிக அடைக்கலம் கொடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அந்த கடமையை செய்ய வேண்டுமென நரேந்திர மோடி அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து